Monday, 12 February 2024

 

ஸ்ரீமத் பகவத் கீதை


 பதினொன்றாவது  அத்தியாயம்

 விஸ்வரூப தர்சன யோகம்

     பகவானின் விஸ்வரூபத்தைக் காணுதல்

 

(அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குத் திவ்ய த்ருஷ்டியைக் கொடுத்த பின்னர், தனது விஸ்வரூபத்தைக் காட்டுகிறார். வார்த்தைகளால் விளக்க முடியாத அளவு பிரம்மாண்டமாகவும், பிரகாசமாகவும், அழகாகவும், அதேசமயம், பயங்கரமாகவும் உள்ள அந்தக் காட்சியைக் கண்டு பிரமிப்பும், அச்சமும் கொள்கிறான், அர்ஜூனன். பின்னர், மீண்டும் தனது சாதாரண உருவத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணர் பக்தியாலும், சரணாகதியாலும் மட்டுமே அவரை அடைய முடியும் என்பதை அர்ஜூனனுக்குத் தெளிவாக உரைக்கிறார்.)

 

1.     अर्जुन उवाच

मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम्।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम।।11.1।।
 

அர்ஜுனன் கூறினான்: “ என் மேல் தயை கூர்ந்து, மிகவும் ரகசியமான,  இந்த உயர்ந்த ஆத்ம ஞானத்தை நீ எனக்கு போதித்ததால், என்னைப் பிடித்திருந்த மாயை விலகி விட்டது.

 

2.     भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम्।।11.2।।

 தாமரைக்கண்ணனே! உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும், மறைவைப் பற்றியும் , உன்னுடைய, எப்போதும் மாறாத மகிமையைப் பற்றியும், உன்னிடம் இருந்து விவரமாகத் தெரிந்து கொண்டேன்.

 

3.     एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम।।11.3।।
 

பரமேஸ்வரா! நீ உன்னைப் பற்றி எப்படி விவரித்தாயோ, அப்படியே இருக்கிறாய். புருஷோத்தமா! இப்போது நான் உன்னுடைய தெய்வீகமான உருவத்தைக்காண ஆசைப்படுகிறேன்.

 

4.     मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो।
योगेश्वर ततो मे त्वं दर्शयाऽत्मानमव्ययम्।।11.4।।
 

ப்ரபோ! யோக வித்தைகளுக்கெல்லாம் தலைவனே! என்னால் உன் அழிவற்ற திவ்ய ஸ்வரூபத்தைப் பார்க்க முடியும் என்றால், அதை எனக்குக் காட்டி அருள்வாயாக!”

 

5.     श्री भगवानुवाच

पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च।।11.5।।
 

ஸ்ரீ பகவான் கூறினார்: “பார்த்தனே! பலவிதமான வண்ணங்களிலும், அளவுகளிலும், வடிவங்களிலும் உள்ள எனது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆச்சரியமான உருவங்களைப்பார்!

 

6.     पश्यादित्यान्वसून्रुद्रानश्िवनौ मरुतस्तथा।
बहून्यदृष्टपूर्वाणि पश्याऽश्चर्याणि भारत।।11.6।।
 

பரதகுலத் தோன்றலே! அதிதியின் பன்னிரண்டு புதல்வர்களையும், அஷ்ட வசுக்களையும், பதினொன்று ருத்திரர்களையும், இரட்டையாயுள்ள அஸ்வினி குமாரர்களையும், நாற்பத்தொன்பது மருதர்களையும், இது வரை யாருக்கும் காட்டப்படாத ஆச்சரியங்களையும் என்னில் பார்!

7.     इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम्।
मम देहे गुडाकेश यच्चान्यद्द्रष्टुमिच्छसि।।11.7।।

குடாகேசனே! ( உறக்கத்தை வென்றவனே) அசையும் பொருட்களாலும், அசையாப்பொருட்களாலும் ஆன இந்தப் பிரபஞ்சம் முழுவதும் என்னில் அமைந்திருப்பதைப் பார். வேறு எதையாவதை நீ பார்க்க விரும்பினாலும், அதையும் என்னுடைய இந்த உடலுக்குள்ளே பார்!

 

8.                 न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम्।।11.8।।
 

ஆனால், இந்தப் புறக்கண்களைக்கொண்டு உன்னால் என்னுடைய தெய்வீக ரூபத்தைக்காண முடியாது. ஆகவே, உனக்கு திவ்ய த்ருஷ்டியைத் தருகிறேன். என்னுடைய கம்பீரமான சிறப்புகளைப் பார்!”

 

9.                 सञ्जय उवाच

एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्।।11.9।।
 

ஸஞ்சயன் கூறினார்: “அரசே! இவ்வாறு கூறி, யோகேஸ்வரனான ஸ்ரீ க்ருஷ்ணன், தன்னுடைய திவ்யமான, ஐஸ்வர்யம் நிறைந்த வடிவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார்.

 

10.अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम्।
  अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम्।।11.10।।
 

அந்த திவ்ய ரூபத்தில், அர்ஜுனன் எண்ணில் அடங்காத முகங்களையும், கண்களையும், தெய்வீகமான ஆபரணங்களையும், பல விதமான திவ்யமான ஆயுதங்களையும் கண்டான்.

 

11.  दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम्।
       सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम्।।11.11।।


 பல வித திவ்யமான மாலைகளை அணிந்து கொண்டும், திவ்யமான மணம் வீசும் வாசனைத் திரவியங்கள் பூசிய உடலுடனும், எல்லாத் திசைகளிலும் முகங்கள் கொண்ட அந்தப்பரம்பொருள் தன்னுடைய ஆச்சரியமான, முடிவற்ற உருவத்தைக் காட்டி அருளினார்.
 

12.  दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता।
       यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः।।11.12।।

ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தால் கூட, அவர்களின் பிரகாசம்,  அந்தப் பரம்பொருளின் அற்புத வடிவின் பிரகாசத்துக்கு ஈடாகாது.

 

13. तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा।।11.13।।
  

அப்போது அர்ஜுனன், பலவாறாகப் பிரிந்து காணப்படும் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், தேவர்களுக்கெல்லாம் தேவனான அந்தப்பரம்பொருளின் உடலில், ஒருசேரக் கண்டான்.

 

14. ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत।।11.14।।

பின்னர், நம்ப முடியாத ஆச்சரியத்துடன்,  மயிர்க்கூச்செறியும் உடலுடன், கைகளிரண்டையும் கூப்பித், தலை வணங்கி, அந்தத் தேவனிடம் பேசலானான்.

 

15. अर्जुन उवाच

पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान्।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान्।।11.15।।
 

“ஸ்ரீ கிருஷ்ணா! உன் உடலுக்குள்ளே, நான் அனைத்துக் கடவுளர்களையும், பல விதமான உயிர்க் கூட்டங்களையும் காண்கிறேன். தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், சிவபெருமானையும், எல்லா முனிவர்களையும், எல்லா தெய்வீகமான சர்ப்பங்களையும் காண்கிறேன்.

 

16. अनेकबाहूदरवक्त्रनेत्रंपश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्।
      नान्तं न मध्यं न पुनस्तवादिंपश्यामि विश्वेश्वर विश्वरूप।।11.16।।
 

நீ எண்ணற்ற கைகளுடனும், எண்ணற்ற வயிறுகளுடனும், எண்ணற்ற முகங்களுடனும், எண்ணற்ற கண்களுடனும் இருப்பதை நான் காண்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தின் தலைவனே! இந்தப் பிரபஞ்சத்தையே உருவமாகக் கொண்டவனே! உன்னுடைய தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் காண முடியவில்லை.

 

17. किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतोदीप्तिमन्तम्।
      पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम्।।11.17।।

கிரீடம் அணிந்து கொண்டு, கதையையும் சக்ராயுதத்தையும் கையில் கொண்டு, உன் ஒளி வெள்ளத்தால் எல்லா இடங்களையும் நீ ஒளி மயமாக்குவதைக் காண்கிறேன். கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போன்று எல்லா திசைகளிலும் பரவி, சூரியனைப்போல ஜ்வலிக்கும் உன்னுடைய பிரகாசத்தால் (கண்கள் கூசுவதால்) , உன்னைப்பார்க்கவே முடியவில்லை.

 

18. त्वमक्षरं परमं वेदितव्यं  त्वमस्य विश्वस्य परं निधानम्।
     त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता  सनातनस्त्वं पुरुषो मतो मे।।11.18।।

நீ தான் அறிந்து கொள்ளப்பட வேண்டிய முழுமையான, பரம்பொருள் என்பதை நான் உணர்கிறேன். இந்தப்படைப்பையெல்லாம் தாங்கிக் காப்பவன் நீ. அழியாத தர்மத்தை எப்போதும் பாதுகாப்பவன் நீ. நீ தான் எப்போதும் இருக்கும் மகோன்னதமான பரமபுருஷன்.

 

19. अनादिमध्यान्तमनन्तवीर्यमनन्तबाहुं शशिसूर्यनेत्रम्।

       पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रम् स्वतेजसा विश्वमिदं तपन्तम्।।11.19।।

 

நீ தொடக்கமும், நடுவும், முடிவும் அற்றவன். உன் சக்திக்கு அளவே இல்லை. நீ எல்லையற்றவன். சூரியனும், சந்திரனும் உனது கண்கள். உன் திருவாயில் இருந்து ஜ்வலிக்கும் நெருப்பு வெளிவருகிறது. உன் பிரகாசத்தால், இந்த படைப்பனைத்தையும் நீ ஒளிர வைக்கிறாய்.

 

20.  द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः।
      दृष्ट्वाऽद्भुतं रूपमुग्रं तवेदं  लोकत्रयं प्रव्यथितं महात्मन्।।11.20।।


 உயிர்களுள் மகோன்னதமானவனே! ஆகாயத்துக்கும், பூமிக்கும் இடையில் உள்ள எல்லா இடங்களிலும் நீ நிரம்பியிருக்கிறாய். உன்னுடைய அற்புதமான, அதே சமயத்தில் பயங்கரமான வடிவத்தைக்கண்டு இந்த மூன்று உலகங்களும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

 

21. अमी हि त्वां सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति।
      स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घाः  स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः।।11.21।।
 

தேவர்கள் எல்லாம் உன்னிடம் புகலடைகிறார்கள். சிலர், பயத்துடன் கைகளைக் கூப்பி உன்னைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும், முழுமை அடைந்த சித்தர்களும், மங்களகரமான ஸ்தோத்திரங்களாலும், பாடல்களாலும் உன்னைத் துதிக்கிறார்கள்.

 

22. रुद्रादित्या वसवो ये च साध्या  विश्वेऽश्िवनौ मरुतश्चोष्मपाश्च।
      गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा  वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे।।11.22।।

ருத்திரர்களும், ஆதித்யர்களும், வசுக்களும், சாத்யர்களும், விஸ்வதேவர்களும், அஷ்வினி குமாரர்களும், மருதர்களும், பித்ருக்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், சித்தர்களும், உன்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

23. रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम्।
      बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाऽहम्।।11.23।।

வலிமை பொருந்தியவனே! பல வாய்களும், பல கண்களும், பல கைகளும், பல தொடைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பயங்கரமான பற்களும் உடைய உன்னைக் கண்டு, எல்லா உலகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றன. நானும் தான்.

 

24. नभःस्पृशं दीप्तमनेकवर्णं  व्यात्ताननं दीप्तविशालनेत्रम्।
      दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो।।11.24।।

ஓ விஷ்ணுவே! பல வர்ணங்களைக்கொண்டு, அகலத்திறந்த வாயுடனும், ஒளியைப் பாய்ச்சும் மிகப்பெரிய கண்களுடனும் காணப்படும் உன்னுடைய விண்ணை முட்டும் வடிவத்தைக் கண்டு, என்னுடைய அந்தராத்மா பயத்தால் நடுங்குகிறது.  என் தைரியத்தையும், அமைதியையும், நான் இழந்து நிற்கிறேன். 

 

25. दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसन्निभानि।
      दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास।।11.25।।

ஒரேயடியாக அழிக்கும் பெரு நெருப்பைப்போன்ற, பயங்கரமான பற்களையுடைய உன்னுடைய பல வாய்களைக்கண்டு, நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். எங்கே போகவேண்டும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தேவர்களின் தலைவனே! இந்தப் பிரபஞ்சத்தின் புகலிடமே! என் மேல் இரக்கம் காட்டு!

 

26.अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः।
  भीष्मो द्रोणः सूतपुत्रस्तथाऽसौ  सहास्मदीयैरपि योधमुख्यैः।।11.26।।
 

திருதராஷ்டிரரின் அனைத்துப் புதல்வர்களும், அவர்கள் அணியில் உள்ள அரசர்களும், பீஷ்மர், த்ரோணாச்சாரியர், கர்ணன் போன்றோரும், எங்கள் அணியின் தளபதிகளும்,

 

27.वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि।
  केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः।।11.27।।

 

உன்னுடைய பயங்கரமான வாய்களுக்குள் அவசர அவசரமாக நுழைவதைப் பார்க்கிறேன். உன்னுடைய பயங்கரமான பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு, சிலருடைய மண்டைகள் நசுங்கி, உடைவதையும் பார்க்கிறேன்.

 

28.यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति।
  तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति।।11.28।।
 

நதிகளின் அலைகள் எவ்வாறு வேகத்துடன் சமுத்திரத்துக்குள் நுழைகின்றனவோ, அதே போல், இந்த மகத்தான போர்வீரர்கள், உன்னுடைய எரிகின்ற வாய்களுக்குள் நுழைகிறார்கள்.

 

29.यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा  विशन्ति नाशाय समृद्धवेगाः।
  तथैव नाशाय विशन्ति लोका स्तवापि वक्त्राणि समृद्धवेगाः।।11.29।।

 

எரிகின்ற நெருப்பில் வீழ்ந்து மடிவதற்காக, அதி வேகமாகப் பறந்து வரும் விட்டில் பூச்சிகளைப்போன்று, இந்த சேனைகள் உன்னுடைய வாய்க்குள் பெருவேகத்துடன் வந்து புகுந்து கொள்கின்றன.

 

30.लेलिह्यसे ग्रसमानः समन्ता ल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भिः।
  तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो।।11.30।।

 

விஷ்ணுவே! உன்னுடைய தீ நாக்குகளால் சுழற்றி வளைத்து, கூட்டம் கூட்டமாக வரும் அந்த உயிர்களை, உன்னுடைய நெருப்பு மயமான வாய்களால் உண்கிறாய். எல்லா இடங்களிலும் பரவியுள்ள, உன்னுடைய தீவிரமான ஒளிக்கதிர்களால், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நீ கொளுத்திக் கொண்டிருக்கிறாய்.

 

31.आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद।
  विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम्।।11.31।।
 

தேவதேவனே! இந்த பயங்கரமான உருவம் உடைய நீ யார்? நான் உன்னடி பணிகிறேன். என் மேல் கருணை காட்டு! படைப்புக்கெல்லாம் முன்னமிருந்தே இருக்கும், உன் இயல்பையோ, செயல்களையோ,  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

 

32.श्री भगवानुवाच

कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान्समाहर्तुमिह प्रवृत्तः।
ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः।।11.32।।
 

ஸ்ரீ பகவான் கூறினார்: “நான் தான் இந்த உலகங்களெல்லாம் அழிவதற்குக் காரணமாகிய, வலிமை பொருந்திய காலம். நீ இந்தப் போரில் பங்கெடுத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, இந்த எதிரணியில் இருக்கும் வீரர்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுவார்கள்.

 

33.तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्यं समृद्धम्।
   मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्।।11.33।।
 

ஆகவே, ஸவ்யசாச்சியே! ( இரண்டுகைகளாலும் அம்பு எறியும் திறன் கொண்டவன்) எழுந்து, போர் புரிந்து, புகழை அடைவாய்! இந்தப் போர் வீரர்களெல்லாம், ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ ஒரு நிமித்தமாக மட்டுமே இருப்பாய்.

 

34.द्रोणं च भीष्मं च जयद्रथं च  कर्णं तथाऽन्यानपि योधवीरान्।
    मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा  युध्यस्व जेतासि रणे सपत्नान्।।11.34।।
 

த்ரோணாச்சாரியர், பீஷ்மர், ஜயத்ரதர், கர்ணன் போன்ற மற்ற வீரர்களும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே எந்த வருத்தமும் இல்லாமல் அவர்களைக் கொல்வாயாக! போர் புரிந்து எதிரிகளை வெற்றி கொள்வாயாக!”

 

35.सञ्जय उवाच

एतच्छ्रुत्वा वचनं केशवस्य  कृताञ्जलिर्वेपमानः किरीटी।
नमस्कृत्वा भूय एवाह कृष्णं  सगद्गदं भीतभीतः प्रणम्य।।11.35।।
 

சஞ்சயன் கூறினார்: “கேசவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனன் பயத்தால் நடு நடுங்கினான். கைகளைக் கூப்பிக் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணன் முன் குனிந்து வணங்கி, பயத்தால் வாய் குழறப் பேசலானான்.”

 

36.अर्जुन उवाच

स्थाने हृषीकेश तव प्रकीर्त्या  जगत् प्रहृष्यत्यनुरज्यते च।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति  सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः।।11.36।।
 

அர்ஜுனன் கூறினான்: “ஹ்ருஷீகேசா! புலன்களின் தலைவனே! இந்தப் பிரபஞ்சமே உன்னைப் புகழ்ந்து மகிழ்கிறது. உன்னில் மயங்கிக் கிடக்கிறது. அரக்கர்கள் உன்னக்கண்டு பயந்து எல்லாத் திசைகளிலும் தப்பியோடுகிறார்கள். முழுமையடைந்த யோகிகள் உன்னைப் பணிந்து வணங்குகிறார்கள்.

 

37.कस्माच्च ते न नमेरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे।
 अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत्।।11.37।।
 

படைப்பின் ஆதி புருஷனாகிய பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாகிய உன்னை மகாத்மாக்கள் ஏன் பணிய மாட்டார்கள்? தேவர்களின் தலைவனே! இந்த உலகத்தின் புகலிடமே! உருவமுடையவைக்கும், உருவம் அற்றவைக்கும் அப்பாற்பட்ட, அழிவற்ற உண்மைப் பொருள் நீ தானே!

38.त्वमादिदेवः पुरुषः पुराण स्त्वमस्य विश्वस्य परं निधानम्।
 वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप।।11.38।।
 

நீ தான் முழு முதற்கடவுள். நீயே ஆதி புருஷன். இந்தப் பிரபஞ்சம் நிலைத்திருக்கும் இடமே நீ தான். அனைத்தையும் அறிபவனும் நீயே. அறியப்பட வேண்டிய பொருளும் நீயே. உன்னதமான இருப்பிடம் நீயே. எண்ணற்ற வடிவங்கள் கொண்டவனே! இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீயே நிரம்பி இருக்கிறாய்!

 

39.वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च।
   नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते।।11.39।।
 

நீயே காற்றின் கடவுளான வாயுதேவன். நீயே தர்மத்தின் தலைவனாகிய யமதர்மன். நீயே நெருப்பின் கடவுளாகிய அக்னி. நீயே சந்திரன். நீயே படைப்புக் கடவுளான பிரம்மா. நீயே எல்லா உயிர்களுக்கும் முப்பாட்டன். ஆயிரம் முறை உன்னை நமஸ்கரிக்கிறேன். மீண்டும் மீண்டும், நமஸ்கரிக்கிறேன்.

 

40.नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व।
 अनन्तवीर्यामितविक्रमस्त्वंसर्वं समाप्नोषि ततोऽसि सर्वः।।11.40।।
 

உன்னை முன் புறத்திலிருந்தும், பின் புறத்திலிருந்தும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் நமஸ்கரிக்கிறேன். நீ எல்லையில்லாத வீரமும், வலிமையும் படைத்தவன். நீ எல்லாவற்றினுள்ளும் பரவி இருக்கிறாய். உண்மையில் நீ தான் எல்லாமே!

 

41.सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति।
 अजानता महिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि।।11.41।।
 

உன்னை என்னுடைய நண்பன் என்று நினைத்துக் கொண்டு, “ஏ க்ருஷ்ணா”, “ ஏ யாதவா”, “ஏ நண்பா” என்றெல்லாம் உன்னை மரியாதையில்லாமல் அழைத்திருக்கிறேன். உன்னுடைய மகிமையை அறியாமல், நான் அலட்சியத்தாலோ, அளவுக்கு மீறிய அன்பாலோ, அப்படி அழைத்து விட்டேன்.

 

42.यच्चावहासार्थमसत्कृतोऽसि  विहारशय्यासनभोजनेषु।
 एकोऽथवाप्यच्युत तत्समक्षं  तत्क्षामये त्वामहमप्रमेयम्।।11.42।।
 

விளையாடும் போதோ, ஓய்வெடுக்கும் போதோ, உட்கார்ந்திருக்கும் போதோ, தனித்திருக்கும் போதோ, மற்றவர் முன்னிலையிலோ, நான் விளையாட்டாக உன்னை மரியாதை இல்லாமல் நடத்தியதற்கெல்லாம், அச்சுதா!  (தன் நிலையில் இருந்து வழுவாதவன்) என்னை மன்னித்துவிடு.

 

43.पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्।
 न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो  लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव।।11.43।।
 

இந்தப் பிரபஞ்சம் முழுவதற்கும், அதில் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருட்களுக்கும், தந்தை நீயே. வழிபடத்தகுந்த உன்னதமான ஆன்மீக குரு நீயே. ஒப்புயர்வில்லாத சக்தி உடையவனே! உனக்குச் சமமானவரே இந்த மூவுலகங்களிலும் இல்லையென்றால், உன்னை விடச் சிறந்தவர் எப்படி இருக்க முடியும்?

 

44.तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम्।
  पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम्।।11.44।।

 

ஆகவே, ஆராதிக்கத்தக்க ஈசனே! குனிந்து வணங்கி உன் கருணைக்காக இறைஞ்சுகிறேன். ஒரு தந்தை தன் மகனை மன்னிப்பதைப் போல, ஒரு நண்பன் தன் நண்பனை மன்னிப்பதைப் போல, ஒரு காதலி தன் காதலனை மன்னிப்பதைப் போல, என் குற்றங்களை நீ மன்னித்துவிடு.

 

45.अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा  भयेन च प्रव्यथितं मनो मे।
  तदेव मे दर्शय देव रूपं  प्रसीद देवेश जगन्निवास।।11.45।।
 

இதற்கு முன் நான் பார்த்தறியாத, உன்னுடைய விஸ்வரூபத்தைக்கண்டு, மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். ஆனாலும், என் மனம் பயத்தால் நடுங்குகிறது. தேவ தேவனே! இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருப்பவனே! தயவு செய்து, என் மேல் கருணை வைத்து, உன்னுடைய இனிய உருவத்தைக் காட்டுவாயாக!

 

46.किरीटिनं गदिनं चक्रहस्त  मिच्छामि त्वां द्रष्टुमहं तथैव।
  तेनैव रूपेण चतुर्भुजेन  सहस्रबाहो भव विश्वमूर्ते।।11.46।।
 

ஆயிரம் கைகளை உடையவனே! இந்தப் பிரபஞ்சத்தையே உடலாகக் கொண்டவனே! சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்தி, தலையில் கிரீடம் அணிந்து, நான்கு கைகளுடன் விளங்கும் உன் அழகிய உருவத்தைக் காண விரும்புகிறேன். “

 

47.श्री भगवानुवाच

मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात्।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम्।।11.47।।
 

ஸ்ரீ பகவான் கூறினார்: “அர்ஜுனா! என் யோக சக்தியால், உனக்கு என்னுடைய பிரகாசமான, எல்லையற்ற, புராதனமான தெய்வீக உருவத்தைக் காட்டினேன். இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் இதைக் கண்டதில்லை.

 

48.न वेदयज्ञाध्ययनैर्न दानै र्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः।
  एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर।।11.48।।
 

குரு வம்சத்தின் மிகச் சிறந்த வீரனே! வேதங்களைக் கற்பதாலோ, வேள்விகள் புரிவதாலோ, சடங்குகளைச் செய்வதாலோ, தான காரியங்களில் ஈடுபடுவதாலோ, கடுமையான தவத்தாலோ கூட, எந்த மனிதனும் நீ பார்த்ததை இதுவரை பார்த்ததில்லை.

 

49.मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम्।
   व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य।।11.49।।
 

என் பயங்கரமான உருவத்தைக் கண்டு, பயமோ, குழப்பமோ அடையாதே. பயமின்றி, மகிழ்ச்சியுடன், என்னுடைய பழைய உருவத்தை, மீண்டும் பார்!”

 

50.सञ्जय उवाच

इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा  स्वकं रूपं दर्शयामास भूयः।
आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सौम्यवपुर्महात्मा।।11.50।।
 

ஸஞ்சயன் கூறினார்: “ இவ்வாறு கூறி, மகாத்மாவான  வாசுதேவன், நான்கு கைகளுடன், தனது உருவத்தைக் காட்டினார். பின்னர், பயந்திருந்த அர்ஜுனனை சமாதானப் படுத்தும் பொருட்டுத் தனது இரண்டு கைகளுடன் சாதாரணமான உருவத்தைக் காட்டினார்.”

 

51.अर्जुन उवाच

दृष्ट्वेदं मानुषं रूपं तवसौम्यं जनार्दन।
इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः।।11.51।।


அர்ஜுனன் கூறினான்: ” கிருஷ்ணா! இரண்டு கைகளுடன் உன்னுடைய இந்த உருவத்தைப் பார்த்தபின் நான் எனது பழைய மன நிலையை அடைந்து விட்டேன். என் மனமும் எப்போதும் போல் ஆகிவிட்டது.”

 

52.श्री भगवानुवाच

सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम।
देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः।।11.52।।


 ஸ்ரீ பகவான் கூறினார்: “என்னுடைய இந்த விஸ்வரூபத்தைப் பார்ப்பது மிகவும் அரிது. தேவர்கள் எல்லாம் தினமும் இதைக் காண மிகுந்த  ஆவலுடன் இருக்கிறார்கள்.

 

53.नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा।।11.53।।


 வேதங்களைக் கற்பதனாலோ, தவத்தாலோ, தானத்தாலோ, வேள்விகளாலோ, நீ பார்த்த என்னுடைய அந்த உருவத்தைப் பார்க்க முடியாது.

 

54.भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन।
ज्ञातुं दृष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप।।11.54।।


 அர்ஜுனா! கலப்படம் இல்லாத தூய பக்தியால் மட்டுமே, என்னை இவ்வாறு காண முடியும். பரந்தபனே! ( எதிரிகளை எரிப்பவனே) என்னுடைய திவ்ய தரிசனம் பெற்றவர்கள், என்னுள் புகுந்து என்னுடன் கலந்து விடுவார்கள்.

 

55.मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव।।11.55।।
 

தனது எல்லாக் கடமைகளையும் என் பொருட்டு நிறைவேற்றுகின்ற, என்னையே நம்பி இருக்கின்ற, என்னிடம் மிகுந்த அன்பு உள்ள, பற்றுகளைத் துறந்த, எந்த உயிர்களிடத்தும் வெறுப்பு இல்லாத, என் பக்தர்கள் என்னை வந்தடைவார்கள்.

 

சுபம்

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/387257025770723098

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் பகவத் கீதை   பதினெட்டாவது அத்தியாயம் மோக்ஷ ஸந்நியாஸ யோகம்   துறத்தல் மற்றும் சரணாகதி        (எந்த நிலையிலும், நமக்கென்று...