ஸ்ரீமத் பகவத் கீதை
பத்தாவது அத்தியாயம்
விபூதி யோகம்
இறைவனின் அளவிட முடியாத மகிமை
(அர்ஜுனன்
ஸ்ரீ கிருஷ்ணருடைய தெய்வீகமான செல்வச்செழிப்பைத்
தனக்கு முழுமையாக விளக்கும்படி வேண்டிக் கொள்கிறான். ‘எந்த ஒரு பொருளாயிருந்தாலும்,
விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், பருவங்களாக இருந்தாலும், அவற்றுள் மிகச்
சிறப்பு வாய்ந்தவனாக இருப்பவன் நானே’ என்று கிருஷ்ணர் தெரிவிக்கிறார்.
இந்த அத்தியாயத்தில்,
மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும், தன்னுடைய தெய்வீகமான சிறப்புகளை, அர்ஜுனனுக்கு
விளக்குகிறார், ஸ்ரீ கிருஷ்ணர்.)
1.
श्री भगवानुवाच
भूय एव महाबाहो श्रृणु मे परमं वचः।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया।।10.1।।
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ வலிமையுடைய தோள்களை உடைய அர்ஜுனா!
என்னுடைய தெய்வீகமான வார்த்தைகளை மீண்டும் கேள்! நீ என்னுடைய பிரியமான நண்பன் ஆகையால்,
உனது நன்மைக்காகத் திரும்பவும் கூறுகிறேன்.
2.
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः।।10.2।
தேவர்களும், மகரிஷிகளும் கூட என்னுடைய மூலத்தை அறிய மாட்டார்கள்.
அந்தத் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், மூலமே நான் தான்.
3.
यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम्।
असम्मूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते।।10.3।।
எனக்குப் பிறப்பும் இல்லை; தொடக்கமும் இல்லை. நான் தான் இந்தப்
பிரபஞ்சத்தின் தலைவன். இந்த உண்மையை அறிந்தவர்கள் மோகத்தில் இருந்தும், அனைத்து விதமான
தீமைகளில் இருந்தும் விடுதலை அடைகிறார்கள்.
4.
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च।।10.4।।
புத்தி, அறிவு, எண்ணங்களில் தெளிவு, மன்னிக்கும் குணம், வாய்மை, புலன்களின் மீதும்,
மனத்தின் மீதும் கட்டுப்பாடு, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம்,
5.
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः।।10.5।।
அஹிம்சை, சமபாவம், திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி
ஆகிய மனிதர்களுடைய பல விதமான குணங்களும் என்னில் இருந்து தான் தோன்றுகின்றன.
6.
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः।।10.6।।
சப்தரிஷிகளும், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்ம குமாரர்களும், பதினான்கு மனுக்களும், என் மனதில்
இருந்து தான் தோன்றினார்கள். அவர்களில் இருந்து இவ்வுலகில் உள்ள பிற மனிதர்கள் தோன்றினார்கள்.
7.
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः।।10.7।।
என்னுடைய இத்தகைய சிறப்புகளை உள்ளது உள்ள படி அறிந்தவர்கள், நிலையான
பக்தியுடன், என்னுடன் இணைகிறார்கள். இதில் யாதொரு ஐயமும் இல்லை.
8.
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः।।10.8।।
இந்தப் படைப்புக்கெல்லாம் மூலபுருஷன் நான் தான். எல்லாம், என்னில்
இருந்து தான் புறப்படுகின்றன. இதையுணர்ந்த ஞானிகள் தீவிர நம்பிக்கையுடனும், பக்தியுடனும்
என்னை வழிபடுகிறார்கள்.
9.
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।
என்னுடைய பக்தர்கள், தங்கள் மனத்தை என் மேல் செலுத்தித் தங்கள்
வாழ்வையே எனக்கு அர்ப்பணித்து, ஒருவர் மற்றவரிடம் என்னுடைய மகிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு,
மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
10.तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।
என்னில் அன்பும் பக்தியும் வைத்துத் தங்கள் மனதால் எப்போதும் என்னுடன்
இணைந்திருப்பவர்களுக்கு, என்னை அடைவதற்கான தெய்வீக அறிவை நான் வழங்குகிறேன்.
11.तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं
तमः।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता।।10.11।।
அவர்களுடைய உள்ளத்துள் உறையும் நான், அவர்கள்
மீது தயை கூர்ந்து, ஞானமென்னும் திருவிளக்கால், அவர்களுடைய அறியாமை
என்னும் இருளைப் போக்குகிறேன்.”
12.अर्जुन उवाच
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान्।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम्।।10.12।।
அர்ஜுனன் கூறினான்: “நீயே உயர்ந்த பரம்பொருள்; நீயே அடைவதற்குச்
சிறந்த இடம்; நீயே புனிதப்படுத்துபவன்; நீயே எப்போதும் இருக்கின்ற, பிறப்பற்ற, மூலாதாரமான
தலைவன்.
13.आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे।।10.13।।
தேவரிஷி நாரதர், அஸிதர், தேவளர், வியாஸர் போன்ற ரிஷிகள் இதை உலகுக்கு
அறிவித்திருக்கிறார்கள். இப்போது, நீயே அதை எனக்கு அறிவிக்கிறாய்.
14.सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि
केशव।
न हि ते भगवन् व्यक्ितं विदुर्देवा न दानवाः।।10.14।।
கேசவா! நீ உண்மையென்று எனக்குக் கூறிய அனைத்தையும் நான் அப்படியே
ஏற்றுக் கொள்கிறேன். பகவானே! உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தேவர்களாலும், அசுரர்களாலும்
கூட அறியமுடியாது.
15.स्वयमेवात्मनाऽत्मानं वेत्थ
त्वं पुरुषोत्तम।
भूतभावन भूतेश देवदेव जगत्पते।।10.15।।
ஓ புருஷோத்தமா! அனைத்து உயிர்களையும் பிறப்பித்தவனே! அனைத்து உயிர்களின்
தலைவனே! தேவதேவனே! இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதியே! உன்னால் மட்டுமே உன் ஸ்வரூபத்தை
அறிந்து கொள்ள முடியும்.
16.वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि।।10.16।।
அனைத்து உலகிலும் ஊடுருவியிருக்கும் உன்னுடைய தெய்வீகமான செல்வச்செழிப்பை எனக்கு முழுமையாக விளக்குவாயாக!
17.कथं विद्यामहं योगिंस्त्वां
सदा परिचिन्तयन्।
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया।।10.17।।
பகவானே! யோகத்தின் தலையாய தலைவனே! உன்னை நான் எவ்வாறு அறிய முடியும்
என்பதையும், உன்னை எந்த எந்த வடிவங்களில் நினைத்து
தியானிக்க முடியும் என்பதையும் எனக்கு விளக்குவாயாக!
18.विस्तरेणात्मनो योगं विभूतिं
च जनार्दन।
भूयः कथय तृप्तिर्हि श्रृण्वतो नास्ति मेऽमृतम्।।10.18।।
ஓ ஜனார்த்தனா! பலவிதமாக வெளிப்படுகின்ற உனது மகோன்னதமான சிறப்புகளையும்,
செல்வங்களையும் பற்றித் திரும்பவும் விளக்கமாகக் கூறுவாயாக! கேட்பதற்கு அமுதம் போல்
இருக்கும் உன் சிறப்புகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதேயில்லை.”
19.श्री भगवानुवाच
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे।।10.19।।
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “குரு வம்சத்துள் சிறந்தவனே! என்னுடைய
தெய்வீகமான சிறப்புகளை உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். ஏனெனில், அவற்றை விவரித்துச்
சொல்லிக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே இல்லை.
20.अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च।।10.20।।
அர்ஜுனா! உறக்கத்தை வென்றவனே! அனைத்து உயிர்களில் உள்ளங்களுக்குள்ளும்
நான் அமர்ந்திருக்கிறேன். அனைத்து உயிர்களுக்கும், நானே முதலும், நடுவும், முடிவும்
ஆகிறேன்.
21.आदित्यानामहं विष्णुर्ज्योतिषां
रविरंशुमान्।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी।।10.21।।
அதிதியின் பன்னிரண்டு புதல்வர்களுள் நான் விஷ்ணு. ஒளி வீசும் பொருட்களுள்
நான் சூரியன். மருதர்களுள் ( காற்றின் வகைகள்) நான் மரீசி. நட்சத்திரங்களுள் நான் சந்திரன்.
22.वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि
वासवः।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना।।10.22।।
வேதங்களுள் நான் சாமவேதம். தேவர்களுள் நான் இந்திரன். புலன்களுள்
நான் மனம். உயிர்களுள் நான் அவைகளின் உணர்வு.
23.रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो
यक्षरक्षसाम्।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम्।।10.23।।
ருத்திரர்களுள் நான் சங்கரன். யக்ஷர்களுள்ளும், ராக்ஷஸர்களுள்ளும்
நான் செல்வத்தின் அதிபதியான குபேரன். வசுக்களுள் நான் அக்னி; மலைகளுள் நான் மேருமலை.
24.पुरोधसां च मुख्यं मां विद्धि
पार्थ बृहस्पतिम्।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः।।10.24।।
பார்த்தனே! புரோகிதர்களுள் நான் ப்ருஹஸ்பதி. சேனைத் தலைவர்களுள்
நான் ஸ்கந்தன். நீர் நிலைகளுள் நான் சமுத்திரம்.
25.महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम्।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः।।10.25।।
மகரிஷிகளுள் நான் ப்ருகுமகரிஷி. ஒலிகளுள் நான் ‘ௐம்’ என்னும் ஒலி.
வேள்விகளுள் நான் ஜபம். மலைகளுள் நான் இமயமலை.
26.अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां
च नारदः।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः।।10.26।।
மரங்களுள் நான் அரசமரம். தேவரிஷிகளுள் நான் நாரதன். கந்தர்வர்களுள்
நான் சித்ரரதன். சித்தர்களுள் நான் கபிலன்.
27.उच्चैःश्रवसमश्वानां विद्धि
माममृतोद्भवम्।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम्।।10.27।।
குதிரைகளுள் நான் ‘உச்சைஸ்ரவஸ்’ என்னும் குதிரை. (இது பாற்கடலை
அமுதத்துக்காகக் கடைந்த போது வெளிவந்தது.) கம்பீரமான யானைகளுள் நான் ‘ஐராவதம்’. மனிதர்களுள்
நான் அரசன்.
28.आयुधानामहं वज्रं धेनूनामस्मि
कामधुक्।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः।।10.28।।
ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம். பசுக்களுள் நான் காமதேனு. பிறப்பின்
காரணங்களுள் நான் மன்மதன். சர்ப்பங்களுள் நான் வாசுகி.
29.अनन्तश्चास्मि नागानां वरुणो
यादसामहम्।
पितृ़णामर्यमा चास्मि यमः संयमतामहम्।।10.29।।
நாகங்களுள் நான் அனந்தன். நீர்களுக்குள் நான் சமுத்திரத்தின் தலைவனாகிய
வருணன். பித்ருக்களுள் நான் அவர்களின் தலைவனாகிய அர்யமா. நீதி வழங்குபவர்களுள் நான்
யம தர்மராஜன்.
30.प्रह्लादश्चास्मि दैत्यानां
कालः कलयतामहम्।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम्।।10.30।।
அசுரர்களுள் நான் ப்ரஹலாதன்.
கட்டுப்படுத்தும் பொருட்களுள் நான் காலம். விலங்குகளுள் நான் சிங்கம். பறவைகளுள்
நான் கருடன்.
31.पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम्।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी।।10.31।।
தூய்மைப்படுத்துபவர்களுள் நான் காற்று. ஆயுதம் ஏந்தியவர்களுள்
நான் ராமன். நீரில் வாழும் உயிர்களுள் நான் முதலை. பாய்ந்தோடும் நதிகளுள் நான் கங்கை.
32.सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम्।।10.32।।
அர்ஜுனா! படைப்பின் முதலும், நடுவும், முடிவும் நான் தான். கல்விகளுள்
நான் ஆன்மாவைப்பற்றிய கல்வி. வாதங்களுள் நான் தர்க்கம்.
33.अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः
सामासिकस्य च।
अहमेवाक्षयः कालो धाताऽहं विश्वतोमुखः।।10.33।।
எழுத்துகளுள் அகாரம் நான். இலக்கணத் தொகைகளுள் நான் ‘த்வந்த்வம்’
( உம்மைத்தொகை). முடிவற்ற காலம் நான். படைப்பாளிகளுள் நான் பிரம்மா.
34.मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च
भविष्यताम्।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा
धृतिः क्षमा।।10.34।।
அனைத்தையும் கவர்ந்து செல்லும் மரணம் நான். இனி வரப்போகும் எதிர்காலத்தின் மூலம் நான். புகழில்,
அதற்குக் காரணமாகிய இனிய சொல் நான். பெண்களின் குணங்களுள் நினைவாற்றல், புத்தி, தைரியம்,
மன்னிப்பு ஆகிய குணங்கள் நான் தான்.
35.बृहत्साम तथा साम्नां गायत्री
छन्दसामहम्।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः।।10.35।।
சாம வேதப்பாடல்களுள் நான் ப்ருஹத்சாமம். கவிதையின் சந்தங்களுள்
நான் காயத்ரி. மாதங்களுள் நான் மார்கழி, பருவங்களுள் நான் வசந்தகாலம்.
36.द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम्।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम्।।10.36।।
ஏமாற்றுபவைகளுள் நான் சூதாட்டம். பிரகாசமானவற்றின் பிரகாசம் நான்.
வெற்றியாளர்களின் வெற்றி நான். உறுதியுடையவர்களின் தீர்மானமும், நல்லவர்களின் நற்குணங்களும்
நான் தான்.
37.वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां
धनंजयः।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः।।10.37।।
விருஷ்ணி குலத்தவர்களுள் நான் கிருஷ்ணன். பாண்டவர்களுள் நான் அர்ஜுனன்.
முனிவர்களுள் நான் வேதவ்யாஸன். மதி நுட்பம் நிறைந்தவர்களுள் நான் சுக்ராச்சாரியன்.
38.दण्डो दमयतामस्मि नीतिरस्मि
जिगीषताम्।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम्।।10.38।।
ஒழுங்கை நிலை நாட்டுவதில் நான் தண்டனை ஆக இருக்கிறேன். வெற்றி
வேண்டுவோருக்குள் நன்னடத்தையாக இருக்கிறேன். ரகசியங்களுள் நான் மௌனமாகவும், ஞானிகளுள்
அவர்களுடைய ஞானமாகவும் இருக்கிறேன்.
39.यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम्।।10.39।।
அனைத்து உயிர்களுக்கும் நான் விதையாக இருக்கிறேன், அர்ஜுனா! உயிருள்ள
பொருளோ, உயிரற்ற பொருளோ, நான் இல்லாமல் இருக்க முடியாது.
40.नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां
परंतप।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया।।10.40।।
பரந்தபனே! என்னுடைய மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் இப்போது உனக்குக்
கூறியதெல்லாம் என்னுடைய அளவிடமுடியாத மகிமைகளின் ஒரு சிறு பகுதி தான்.
41.यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव
वा।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम्।।10.41।।
நீ, அழகான, சிறந்த, வலிமையுள்ள எந்தப்பொருளைப் பார்த்தாலும், அது
என் மகிமைகளில் இருந்து வந்த ஒரு சிறிய சுடர்
என்பதை அறிவாய்.
42.अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्।।10.42।।
இவை அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? என்னில் ஒரு மிகச்சிறிய பகுதியின்
மூலம் இந்தப் படைப்பனைத்திலும், பரந்து இருந்து, அதை நான் காப்பாற்றுகிறேன். (இதைத்
தெரிந்து கொண்டாலே போதும்.)
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/3776267746676466787
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
No comments:
Post a Comment