ஸ்ரீமத் பகவத்
கீதை
நான்காவது அத்தியாயம்
ஞான கர்ம சன்யாஸ
யோகம்
(ஞானத்தைத் தேடுதல் மற்றும்
பற்றில்லாமல் செயலாற்றுதல்)
(எப்பொழுதெல்லாம் தர்மம் அழியும் நிலைக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம்,
சாதுக்களைக் காப்பாற்றுவதற்காகவும், தீயவர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவும்,
தன்னைத் தானே படைத்துக்கொள்வதாகவும் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார். மேலும்,
செயல் செய்வதை யாரும் தவிர்க்க முடியாது என்றும், ‘இந்தச் செயலை நான் செய்கிறேன்’ என்று
எண்ணாமல், செயலின் விளைவுகளில் பற்று வைக்காமல், செயலாற்றுபவனே சிறந்த யோகி என்றும்,
அத்தகைய யோகிகள் இந்த உலகத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தையும் பிரம்மத்தின் வடிவமாகவே
பார்க்கிறார்கள் என்றும் கூறுகிறார். அறிவு என்னும் வாளால், தன் சந்தேகங்களை வெட்டி
எறிந்து விட்டு, கர்ம யோகத்தில் முழுவதுமாக ஈடுபடச் சொல்லி அர்ஜூனனை உற்சாகப்படுத்துகிறார்,
பகவான் கிருஷ்ணர்.)
1.
श्री भगवानुवाच
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्।
विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत्।।4.1।।
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ நான் யோகம் என்னும் இந்த நித்தியமான விஞ்ஞானத்தை
முதன் முதலில் விவஸ்வானுக்கு (சூரியன்) உபதேசித்தேன். விவஸ்வான் அதை மனுவுக்கு உபதேசித்தார்.
பின்னர் மனு அதை இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தார்.
2.
एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः।
स कालेनेह महता योगो नष्टः परन्तप।।4.2।।
எதிரிகளைப் பணிய வைப்பவனே! இவ்வாறே ராஜரிஷிகள்
பரம்பரையாக இந்த யோகஞானத்தைத் தொடர்ந்து பெற்று வந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அது
வழக்கொழிந்து விட்டது.
3.
स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः।
भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्।।4.3।।
அதே புராதனமான, பரம ரகசியமான, யோகஞானத்தை,
உனக்குச் சொல்கிறேன், ஏனென்றால், நீ எனது நண்பன் மட்டும் அல்ல, பக்தனும் கூட. உன்னால்
இந்த உயர்ந்த ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியும். “
4.
अर्जुन उवाच
अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः।
कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति।।4.4।।
அர்ஜுனன் கேட்டான்: “விவஸ்வானுக்குப்பிறகு
தான் நீ பிறந்திருக்கிறாய். பின் எப்படி முதன்முதலில் நீ அவருக்கு யோக ஞானத்தை உபதேசித்திருக்க
முடியும்?”
5.
श्री भगवानुवाच
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप।।4.5।।
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “அர்ஜுனா! நீயும் நானும், பல முறை பிறந்துள்ளோம்.
பரந்தபனே! எனக்கு என்னுடைய எல்லாப் பிறவிகளும் நினைவில் இருக்கின்றன. ஆனால், உனக்கு
அவையெல்லாம் மறந்து விட்டன.
6.
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया।।4.6।।
உண்மையில், எனக்குப் பிறப்பு என்பது இல்லை.
இந்த உயிர்களுக்கெல்லாம் நான் தலைவனாக இருந்த போதிலும், எப்போதும் அழியாத நிலை எனக்கு
இருந்த போதிலும், எனது தெய்வீக சக்தியால், யோகமாயை மூலம் நான் இந்த உலகில் தோன்றுகிறேன்.
7.
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदाऽऽत्मानं सृजाम्यहम्।।4.7।।
எப்பொழுதெல்லாம் தர்மத்துக்குச் சரிவு
ஏற்படுகிறாதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் பெருகுகிறதோ, அப்போதெல்லாம், என்னை நானே ஸ்ருஷ்டித்துக்
கொள்கிறேன்.
8.
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।
அற வழியில் நடப்பவர்களைப் பாதுகாக்கவும்,
தீயவர்களை அழித்தொழிக்கவும், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டவும், ஒவ்வொரு யுகத்திலும்
நான் தோன்றுகிறேன்.
9.
जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन।।4.9।
அர்ஜுனா! என்னுடைய் பிறப்பு மற்றும் செயல்களின்
தெய்வீகத்தை உணர்ந்து கொள்பவர்கள், இந்த உடலைக் களைந்த பின்னர், மீண்டும் பிறவி எடுக்காமல்,
என்னுடைய நித்தியமான இருப்பிடத்திற்கு வந்து சேர்கிறார்கள்.
10.
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः।।4.10।।
பற்று, பயம், கோபம் ஆகியவற்றைத் துறந்து,
என்னிலேயே முழுக்க ஈடுபட்டு, என்னில் அடைக்கலம் புகுந்து, என்னைப்பற்றிய ஞானத்தால்
தூய்மையடைந்து, முன்னமே, அநேகம் பேர் என்னுடைய அன்பை அடைந்திருக்கிறார்கள்.
11.
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः।।4.11।।
யார் யார் எந்த வழியில் என்னிடம் வர முயல்கிறார்களோ,
அந்த வழிகளிலேயே சென்று நான் அவர்களை அடைகிறேன். பார்த்தனே! அறிந்தோ, அறியாமலோ, எல்லோருமே
என் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.
12.
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा।।4.12।।
இந்த உலகத்தில், லௌகிகமான (உலகப்பொருட்கள்
சம்பந்தப்பட்ட) விஷயங்களில் வெற்றியை விரும்புபவர்கள், தேவதைகளை வழிபடுகிறார்கள், ஏனெனில்,
லௌகிகமான வெற்றிகள் விரைவில் கிடைத்துவிடுகின்றன.
13.
चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।
மனிதர்களின் குணங்களையும், அவர்களின்
செயற்பாடுகளையும் பொருத்து நான்கு விதமான வர்ணங்களை (பிரிவுகளை) நான் வகுத்தேன். இந்த
முறையை நானே ஏற்படுத்தியிருந்தாலும், நான் எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை; எந்த மாற்றமும்
அடைவதில்லை.
14.
न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा।
इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते।।4.14।।
எந்தச் செயலின் கறையும் என் மேல் படிவதில்லை.
எந்தச் செயலின் விளைவுகள் மீதும் எனக்கு விருப்பம் இல்லை. ‘நான் இப்படிப்பட்டவன்’ என்று
என்னை அறிபவர்கள், செயல்களினால் உண்டாகும் பந்தங்களில் சிக்குவதில்லை.
15.
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं
कृतम्।।4.15।।
இந்த உண்மையை உணர்ந்ததனால், மோக்ஷத்தை
விரும்பியவர்கள் கூட, சும்மா இருக்காமல், தங்களுக்கான செயலை ஆற்றினார்கள். ஆகவே அவர்கள்
அடி பற்றி, நீயும் உன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
16.
किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्।।4.16।।
செயல் என்பது என்ன? செயலின்மை என்பது என்ன? ஞானிகள் கூட இந்த விஷயத்தைத் தீர்மானிப்பதில்
குழப்பம் அடைகிறார்கள். நான் உனக்கு செயலாற்றுவதின் ரகசியத்தை இப்போது விளக்குகிறேன்.
அதை அறிந்தால், லௌகிக பந்தங்களில் இருந்து நீயே உன்னை விடுவித்துக்கொள்ள முடியும்.
17.
कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः।
अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः।।4.17।।
செய்யத்தக்க செயல்கள் எவை, செய்யக்கூடாத
செயல்கள் எவை, செயலாற்றாமை என்றால் என்ன, என்பதையெல்லாம் நீ நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டும். செயலைப்பற்றிய உண்மை, மிகவும் ஆழமானது மட்டும் அல்ல; அதைப்புரிந்து கொள்வதும்
கடினம்.
18.कर्मण्यकर्म
यः पश्येदकर्मणि च कर्म यः।
स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्।।4.18।।
எந்தச்
செயலையும் செய்யாமல் இருக்கும் போதே, செயல் செய்துகொண்டிருக்க முடியும் என்பதையும், நிறைய செயல் செய்யும் போது கூட, ஒன்றும் செய்யாதது
போல் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்தவர்களே உண்மையான ஞானிகள். (சோம்பேறித்தனத்தாலோ, விருப்பம் இல்லாததனாலோ, செயல்களைச்செய்யாமல்
இருப்பவர்கள் கூட, மனதினால் அந்தச் செயல்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். தங்கள்
செயல்களின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல்
செயலாற்றுபவர்கள் தாங்கள் ஒன்றுமே செய்யாததைப்போல உணர்கிறார்கள்.)
எல்லாச் செயல்களையும் செய்து கொண்டிருந்தாலும்,
அவர்கள் தான் யோகிகள். அவர்கள் தங்கள் செயல்களுக்கு எஜமானர்கள்.
19.यस्य
सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः।।4.19।।
உலக இன்பங்களுக்கு ஆசைப்படாமல் யார் செயல்
செய்கிறார்களோ, யார் தங்கள் தெய்வீக அறிவாகிய நெருப்பில், தங்கள் செயல்களின் விளைவுகளை
எரித்து விட்டார்களோ, அவர்களைத் தான் ஞானிகள் என்று அறிவொளி பெற்ற முனிவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
20.त्यक्त्वा
कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः।
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति
सः।।4.20।।
அத்தகையவர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளின்
மேல் உள்ள பற்றைத் துறந்து விட்டதால், எப்போதும் திருப்தியுடன் இருக்கிறார்கள். அவர்கள்
வெளியில் உள்ள பொருட்களை நம்பி இல்லை. செயலில் இடையறாது ஈடுபட்டுள்ள போதிலும், அவர்கள்
எதுவுமே செய்யாதவர்கள் போல் தான் இருக்கிறார்கள்.
21.निराशीर्यतचित्तात्मा
त्यक्तसर्वपरिग्रहः।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।4.21।।
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இது
என்னுடையது என்ற உரிமை உணர்வு இல்லாமல், தங்களது மனத்தையும் அறிவையும் முழுமையாகக்
கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு, உடலால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்களால் எந்த விதப்
பாவமும் அவர்களை அண்டுவதில்லை.
22.यदृच्छालाभसन्तुष्टो
द्वन्द्वातीतो विमत्सरः।
समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते।।4.22।।
தானாகக்
கிடைப்பதை வைத்துக்கொண்டு திருப்தியடைந்து, பொறாமை இன்றி, வாழ்க்கையில் உள்ள இரட்டைகளைக்கடந்து
அவர்கள் வாழ்கிறார்கள். ( வாழ்வில், நன்மை-தீமை, பகல்-இரவு, சரி-தவறு, நண்பன்-பகைவன்,
போன்ற இரட்டைகள் உண்டு. அவை சாதாரணமானவர்களைப் பாதிக்கும்.) வெற்றியையும், தோல்வியையும்
சமமாகப் பாவிக்கும் அவர்கள் எந்தச் செயல் புரிந்தாலும், அதன் விளைவுகள் அவர்களைக் கட்டுப்
படுவத்துவதில்லை.
23.गतसङ्गस्य
मुक्तस्य ज्ञानावस्थितचेतसः।
यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते।।4.23।।
உலகப்பொருட்களின்
மேல் உள்ள பற்றினால் ஏற்படும் பந்தங்களில் இருந்து விடுபட்டுவிட்ட அவர்களுடைய புத்தியானது
தெய்வீக ஞானத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் இறைவனுக்கு
அர்ப்பணிக்கும் வேள்வியாக நினைத்துச் செய்வதால், தாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளில்
இருந்து அவர்கள் விடுதலை பெற்று விடுகிறார்கள்.
24.ब्रह्मार्पणं
ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना।।4.24।।
இறையுணர்வில்
முழுவதுமாக ஆழ்ந்துள்ளவர்களுக்கு, வேள்வியில் இறைவனுக்காக அளிக்கும் காணிக்கைப்பொருட்கள்
அனைத்தும் இறைவன் தான். எந்த நெருப்பில் அந்தக்
காணிக்கை அளிக்கப்படுகிறாதோ, அந்த நெருப்பும் இறைவன் தான். காணிக்கை அளிப்பவனும் இறைவன்
தான், அந்த வேள்வியினால் கிடைக்கும் பலனும் இறைவன் தான். வேள்வியின் பலனை அனுபவிப்பவனும்
இறைவன் தான். இவ்வாறு அனைத்திலும் இறைவனைக் காண்பவர்கள், எளிதாக இறைவனை அடைகிறார்கள்.
25.दैवमेवापरे
यज्ञं योगिनः पर्युपासते।
ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति।।4.25।।
ஒரு
சில யோகிகள் தேவதைகளுக்குப் பொருட்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். ஆனால், சரியான
விதத்தில் வழிபாடு செய்பவர்கள் தங்களுடைய ஆத்மாவையே, பரம்பொருளுக்குக் காணிக்கையாக
அளிக்கிறார்கள்.
26.श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये
संयमाग्निषु जुह्वति।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति।।4.26।।
சிலர்
புலனடக்கம் என்ற வேள்வித்தீயில் தங்கள் புலன்களை அர்ப்பணிப்பதன் மூலம் வழிபாடு செய்கிறார்கள்.
வேறு சிலர் புலன்களையே இறைவனை உணர்வதற்கான வழிகளாகக்கண்டு, அவை மூலமே வழிபாடு செய்கிறார்கள்.
27.सर्वाणीन्द्रियकर्माणि
प्राणकर्माणि चापरे।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते।।4.27।।
இன்னும்
சிலர், நல்லறிவால் உந்தப்பட்டு, தங்களுடைய
புலன்கள் ஆற்றும் செயல்களையும், தங்களுடைய வாழ்வின் ஆற்றலையும், மன அடக்கம்
என்ற நெருப்பில் அர்ப்பணிக்கிறார்கள்.
28.द्रव्ययज्ञास्तपोयज्ञा
योगयज्ञास्तथापरे।
स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः।।4.28।।
சிலர்
தங்கள் செல்வங்களை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் தவத்தை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் அஷ்டாங்க
(எட்டு வகை) யோகத்தை அனுசரிக்கிறார்கள், மற்றும் சிலர் சாஸ்திரங்களைக் கற்று, நல்லறிவு
பெற்றுக், கடினமான மன உறுதியுடன் வாழ்கிறார்கள்.
29.अपाने
जुह्वति प्राण प्राणेऽपानं तथाऽपरे।
प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः।।4.29।।
மற்றும் சிலர், வெளியே விடும் மூச்சை உள்ளே வரும் மூச்சுக்குக்
கொடுக்கிறார்கள்; வேறு சிலர் உள்ளே வரும் மூச்சை வெளியே விடும் மூச்சுக்குக் கொடுக்கிறார்கள்.
சிலர் உள்ளே வந்து வெளியே போகும் மூச்சைப் பிராணாயாமத்தின் மூலம் கட்டுப்படுத்தித்
தன் வாழ்வின் சக்தியை ஒழுங்குபடுத்துகிறார்கள்.
30.अपरे
नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति।
सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः।।4.30।।
இன்னும் சிலர் தாங்கள் உண்ணும் உணவில்
கட்டுப்பாடு வைத்துக்கொண்டு, தங்கள் மூச்சை வாழ்வின் சக்திக்கு அர்ப்பணிக்கிறார்கள்.
இப்படி எது செய்தாலும், இவர்கள் அனைவருமே தங்கள் மாசு நீங்கப் பெறுகிறார்கள்.
31.यज्ञशिष्टामृतभुजो
यान्ति ब्रह्म सनातनम्।
नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतो़ऽन्यः कुरुसत्तम।।4.31।।
வேள்வியின் ரகசியத்தை அறிந்து, அதில்
ஈடுபடுபவர்கள், ஆதி அந்தமில்லாத பரம்பொருளை நோக்கிச் செல்கிறார்கள். குரு வம்சத்தவருள்
சிறந்தவனே! இத்தகைய வேள்விகளைச் செய்யாதவர்கள் இந்த உலகிலோ, அல்லது அடுத்த உலகிலோ, இன்பத்தை அடைவதில்லை.
32.एवं
बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा
विमोक्ष्यसे।।4.32।।
இப்படிப்பட்ட பல விதமான வேள்விகளைப்பற்றி,
வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேள்விகள் அனைத்தும், செயல்களில் இருந்தே தொடங்குகின்றன.
இதைப் புரிந்து கொண்டால், உலகப் பொருட்களின் மீது உள்ள பந்தம் அறுபடுகிறது.
33.श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः
परन्तप।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते।।4.33।।
பரந்தபனே! ஞான வேள்வியானது, பொருட்களால்
செய்யப்படும் வேள்வியை விட உயர்ந்தது. எப்படியும், எல்லா வேள்விகளும் ஞானத்தில் தான்
வந்து சேருகின்றன.
34.तद्विद्धि
प्रणिपातेन परिप्रश्नेन सेवया।
उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः।।4.34।।
ஒரு ஆன்மீக குருவை அடைந்து அவரிடம், மரியாதையுடன் கேள்விகள் கேட்டு, அவருக்குத் தேவையான
சேவைகளைச்செய்து, உண்மையை அறிந்து கொள்வாய்! உண்மையை உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு முனிவரால்
மட்டுமே இந்த அறிவை உனக்குப் புகட்ட முடியும்.
35.यज्ज्ञात्वा
न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो
मयि।।4.35।।
அர்ஜுனா! இந்த வழியைப்பின்பற்றி, ஒரு
சிறந்த குருவிடம் ஞானம் பெற்ற பின்னர், நீ மீண்டும் மாயையில் விழமாட்டாய். அந்த ஞானத்தின்
ஒளியில், உயிர்கள் அனைத்தும், பரம்பொருளின் அங்கங்களே என்பதையும், அவைகள் அனைத்தும்
என்னுள் இருக்கின்றன என்பதையும் காண்பாய்!
36.अपि
चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि।।4.36।।
மிகவும் மோசமான பாவிகள் கூட, இந்தப் பிறவிப்
பெருங்கடலை, தெய்வீக அறிவு என்ற படகில் அமர்ந்து கடந்து விட முடியும்.
37.यथैधांसि
समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते
तथा।।4.37।।
கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது
எவ்வாறு விறகை எரித்துச் சாம்பலாக்குகிறதோ, அவ்வாறே ஞானம் என்னும் நெருப்பானது உலகப்பொருட்களுடன்
சம்பந்தப்பட்ட செயல்பாடுகளின் விளைவுகளை முழுவதுமாக எரித்து விடுகிறது.
38.न हि
ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते।
तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति।।4.38।।
இந்த உலகில், ஞானத்தைப்போலத் தூய்மைப்
படுத்துவது எதுவும் இல்லை. நீண்ட காலம் யோகப்பயிற்சி செய்து, மனத்தூய்மை அடைந்தவர்,
காலப்போக்கில் அத்தகைய ஞானத்தை அடைகிறார்.
39.श्रद्धावाँल्लभते
ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति।।4.39।।
ஆழ்ந்த சிரத்தையுடன் தங்கள் மனத்தையும்,
புலன்களையும் அடக்கிப் பயிற்சி மேற்கொண்டவர்கள் தெய்வீக ஞானத்தை அடைகிறார்கள். அத்தகைய
உயர்ந்த ஞானத்தின் மூலம் , விரைவிலேயே நிரந்தரமான அமைதியைப் பெறுகிறார்கள்.
40.अज्ञश्चाश्रद्दधानश्च
संशयात्मा विनश्यति।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः।।4.40।।
ஆனால், சிரத்தையும் இல்லாமல், ஞானமும்
இல்லாமல், எல்லாவற்றையும் சந்தேகப்படுபவர்கள், வீழ்ச்சியடைகிறார்கள். அவநம்பிக்கை உடையவர்களுக்கு,
இப்பிறவியில் மட்டும் அல்ல, அடுத்த பிறவியிலும் மகிழ்ச்சி கிடைக்காது.
41.योगसंन्यस्तकर्माणं
ज्ञानसंछिन्नसंशयम्।
आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय।।4.41।।
செல்வங்களை வெற்றி கொள்ளும் தனஞ்சயனே!
யோகம் என்னும் நெருப்பில் தங்கள் செயல்களைத் துறந்தவர்களையும், ஞானத்தால் தங்கள் சந்தேகங்களைப்
போக்கிக் கொண்டவர்களையும் , ஆத்மஞானத்தில் மூழ்கி இருப்பவர்களையும், செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை.
42.तस्मादज्ञानसंभूतं
हृत्स्थं ज्ञानासिनाऽऽत्मनः।
छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत।।4.42।।
ஆகவே, பரத வம்சத்தோன்றலே! அறிவு என்னும்
கூரிய வாளால், உன் மனதில் தோன்றும் சந்தேகங்களை வெட்டி எறிந்து விட்டு, உன்னைக் கர்மயோகத்தில்
நிலை நிறுத்திக் கொள்வாயாக! எழுந்து, செயலில் இறங்குவாயாக!
சுபம்
No comments:
Post a Comment