ஸ்ரீமத் பகவத்
கீதை
ஆறாவது அத்தியாயம்
தியான யோகம்
(தியானம் செய்யும்
முறை மற்றும் அதன் சிறப்பு)
( யோகம் செய்வது எப்படி என்றும், யோகிகளின்
சிறப்பைப்பற்றியும், புலனடக்கத்தின் அவசியம் பற்றியும், எல்லாவற்றையும் விட, இறைவன்
மேல் முழு மனதுடன் பக்தி செலுத்துவதன் மேன்மையைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு
விளக்குகிறார்.)
1.
श्री भगवानुवाच
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः।।6.1।।
ஸ்ரீ பகவான் கூறினார்: “தாங்கள் செய்ய
வேண்டிய அக்னி வேள்வியைச் செய்யாமல் விட்டு விட்டவர்களும், உடல் மூலமாக ஆற்ற வேண்டிய
கடமையை ஆற்றாமல் இருப்பவர்களும், சந்நியாசிகளாகி விட மாட்டார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட
செயல்களை, அவைகளால் ஏற்படப்போகும் பலன்களின் மேல் பற்று வைக்காமல், மனமாரச்செய்பவர்களே,
உண்மையான சந்நியாசிகள் ஆவார்கள்.
2.
यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव।
न ह्यसंन्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन।।6.2।।
சந்நியாசம் வேறு, யோகம் வேறு அல்ல. உலகப்பற்றைத் துறக்காத எவரும்
யோகிகளாக ஆக முடியாது.
3.
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते।।6.3।।
யோகத்தில் முழுமையடைய விரும்புபவர்களுக்கு, பற்றில்லாமல் செயல்
புரிவதே வழி என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே யோகத்தில் உன்னத நிலை அடைந்தவர்களுக்கு,
தியானத்தில் ஈடுபட்டு, மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்வதே வழி என்று சொல்லப்படுகிறது.
4.
यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते।।6.4।।
உலகப்பொருட்களின் மீதும் பற்று வைக்காமல், செயல்கள் மீதும் பற்று
வைக்காமல், தாங்கள் செய்யும் செயல்கள் இத்தகைய நன்மைகளைத் தர வேண்டும் என்ற ஆசையும்
இல்லாமல் கடமையைச் செய்பவர்கள், யோக விஞ்ஞானத்தில் உன்னத நிலையை அடைகிறார்கள்.
5.
उद्धरेदात्मनाऽऽत्मानं नात्मानमवसादयेत्।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः।।6.5।।
உன்னுடைய மனத்தின் ஆற்றலைக்கொண்டு உன்னை
உயர்த்திக்கொள்; ஆனால் தாழ்த்திக் கொண்டு விடாதே. ஏனென்றால், நம்முடைய நண்பனும் இந்த
மனம் தான்; நம்முடைய எதிரியும் இந்த மனம் தான்.
6.
बन्धुरात्माऽऽत्मनस्तस्य येनात्मैवात्मना जितः।
अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्।।6.6।।
தன்னுடைய மனதை வெற்றி கொண்டவனுக்கு அவனுடைய மனம் அவனுக்கு நண்பனாக
ஆகிறது. ஆனால், தன் மனதுக்கு அடிமையாக இருப்பவனுக்கு அவனுடைய மனமே அவனுடைய எதிரியாகி
விடுகிறது.
7.
जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः।।6.7।।
தங்கள் மனதை வெற்றி கொண்ட யோகிகள், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம்,
மரியாதை – அவமானம் போன்ற இரட்டை நிலைகளில் இருந்து மேலே சென்று விடுகிறார்கள். அத்தகையவர்கள்
மன அமைதியுடன், இறைவன் மீதுள்ள தங்கள் பக்தியில்
நிலையாக இருக்கிறார்கள்.
8.
ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः।।6.8।।
தங்களுடைய ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் திருப்தியடைந்து, தங்கள்
புலன்களை வென்று, எல்லா சூழ்நிலைகளிலும், சிறிதும் சலனமடையாமல் இருக்கும் யோகிகள்,
கூழாங்கல்லையும், தங்கத்தையும் ஒன்றே போல் பார்க்கிறார்கள்.
9.
सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते।।6.9।।
அவர்களைப் பொருத்த மட்டில், நலம் விரும்பிகளோ, நண்பர்களோ, எதிரிகளோ,
பக்தர்களோ, எல்லாருமே ஒன்றுதான். யோகிகள் தங்களை
வெறுப்பவர்களிடத்தும், தங்கள் உறவினர்களிடத்தும், விருப்பு வெறுப்பு இன்றியும், அற
வழியில் நடப்பவர்களிடத்தும், பாவிகளிடத்தும் பாரபட்சமின்றியும் நடந்து கொள்கிறார்கள்.
10. योगी
युञ्जीत सततमात्मानं रहसि स्थितः।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः।।6.10।।
யோக நிலையை அடைய விரும்புபவர், தனிமையில் இருந்து, எப்போதும் தியானத்தில்
ஈடுபட்டு, உடலையும், உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்து இருப்பதுடன், பொருட்கள் மேல்
உள்ள விருப்பத்தையும், அவற்றைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையையும், துறந்து
விட வேண்டும்.
11.शुचौ
देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम्।।6.11।।
அவர், தூய்மையான ஒரு இடத்தில், அதிக உயரமாகவும், தாழ்வாகவும் இல்லாதபடி,
சிறிது புல்லைப்பரப்பி, அதன் மேல் ஒரு மான்
தோலை வைத்து, அதன் மேல் ஒரு துணியை விரித்து, தியானம் செய்யும் ஆசனத்தைத் தயாரித்துக்
கொள்ள வேண்டும்.
12.तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये।।6.12।।
ஆசனத்தில் அசையாமல் அமர்ந்து கொண்டு,
மனதை ஒருமுகப்படுத்தி, எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தி, தியானத்திலேயே கவனத்தைச்
செலுத்த வேண்டும்.
13.समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः।
संप्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्।।6.13।।
தன்னுடைய
ஆசனத்தில் அசையாமல் அமர்ந்து, தன்னுடைய உடல், கழுத்து, தலை இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்
இருக்குமாறு வைத்துக்கொண்டு, கவனத்தை மூக்கின் முனை மேல் வைத்துக் கண்களை அலைய விடாமல்
நிறுத்தி, எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து, ஒருமுகமாகக் கவனத்தைக் குவித்து,
தியானத்தில் ஈடுபட வேண்டும்.
14.प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः।।6.14।।
இவ்வாறு, அமைதியுடனும், அச்சமில்லாமலும்,
அங்கும் இங்கும் அலை பாயாத மனத்துடனும், திடமான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு,
என்னை மட்டுமே உன்னதமான குறிக்கோளாகக்கொண்டு, யோகியானவன் தியானிக்க வேண்டும்.
15.युञ्जन्नेवं सदाऽऽत्मानं योगी नियतमानसः।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति।।6.15।।
இவ்வாறு என்னில் மனத்தை ஈடுபடுத்தி, கட்டுப்பாட்டுடன்
தியானம் செய்பவன் நிர்வாண நிலையை அடைந்து, மகத்தான அமைதியுடன், என்னுள்ளே நிரந்தரமாக
இருக்கிறான்.
16.नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन।।6.16।।
அர்ஜுனா! அதிகமாக உண்பவர்களோ,
மிகவும் குறைவாக உண்பவர்களோ, அதிகம் உறங்குபவர்களோ, மிகக்குறைவாக உறங்குபவர்களோ, யோகத்தில்
வெற்றி அடைய முடியாது.
17.युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य
कर्मसु।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा।।6.17।।
மிதமான உணவு உண்டு, மிதமாக வாழ்க்கையை அனுபவித்து, மிதமாகச் செயலாற்றி, மிதமாக உறங்குபவர்களால் , யோகத்தின்
மூலம் எல்லாத் துன்பங்களையும் களைந்து விட முடியும்.
18.यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते
तदा।।6.18।।
யோகிகள், முழுமையான கட்டுப்பாட்டுடன்,
பொருட்கள் மேல் ஆசைப்படுவதை விடுத்துத் தன், ஆத்மாவின் மேலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
புலன்களின் ஆசைக்கு அடிமையாகாத அப்படிப்பட்ட மனிதர்களே உண்மையான யோகிகள்.
19.यथा दीपो निवातस्थो नेङ्गते
सोपमा स्मृता।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः।।6.19।।
காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் எவ்வாறு அசையாமல் எரிகிறதோ, அவ்வாறே,
ஒரு யோகியின் கட்டுப்பாடுள்ள மனமும், பரம்பொருள் மீதே நிலை பெற்று விளங்குகிறது.
20.यत्रोपरमते चित्तं निरुद्धं
योगसेवया।
यत्र चैवात्मनाऽऽत्मानं पश्यन्नात्मनि
तुष्यति।।6.20।।
உலகச் செயல்பாடுகளில் இருந்து விலகிவிட்ட
மனத்துடன், யோகப்பயிற்சியின் மூலம் அசையாத நிலை அடைந்துள்ள யோகி, தனது தூய்மையான மனதின்
மூலம் தன் ஆத்மாவைத் தரிசித்து அந்த ஆனந்தத்தில் திளைத்திருக்கிறான்.
21.सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम्।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः।।6.21।।
புலன்களுக்கெட்டாத, புத்திக்கு மட்டுமே
எட்டக்கூடிய, அந்த எல்லையற்ற ஆனந்த நிலையில், அவன் பரம்பொருளின் நினைவிலிருந்து ஒரு
நொடியும் விலகுவதில்லை.
22.यं लब्ध्वा चापरं लाभं मन्यते
नाधिकं ततः।
यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते।।6.22।।
இந்த நிலையை அடைந்த ஒருவன், வேறு எதையும் இதை விடச் சிறந்ததாகக்
கருதுவதில்லை. இவ்வாறு, ஆனந்தத்தில் நிலை பெற்றுள்ள அவன் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும்
அதனால் சலனப்படுவதில்லை.
23.तं विद्याद् दुःखसंयोगवियोगं
योगसंज्ञितम्।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा।।6.23।।
துன்பத்துடன் சேராமல், விடுபட்டு நிற்கும் நிலையே யோகம் எனப்படுகிறது.
ஒருவன் மனதை அலைய விடாமல், திடமாக இந்த யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
24.सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा
सर्वानशेषतः।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः।।6.24।।
யோகியானவன், உலகப்பொருட்களின் மீதான ஆசையை, முற்றிலும் துறந்து,
மனம் போன வழி போகும் புலன்களை அடக்க வேண்டும்.
25.शनैः शनैरुपरमेद् बुद्ध्या धृतिगृहीतया।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्।।6.25।।
நிதானமாகவும், சீராகவும், வேறு எதைப்பற்றியும்
எண்ணாமலும், உள்ளத்தில் உறுதியோடு, தியானிக்கும் போது, எண்ணம் இறைவன் மேல் மட்டுமே,
நிலை பெறுகிறது.
26.यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम्।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत्।।6.26।।
எப்பொழுதெல்லாம், இந்த நிலையில்லாத மனம் அங்குமிங்கும் அலைகிறதோ,
அப்பொழுதெல்லாம் அதைத் திரும்ப இழுத்து, மீண்டும், மீண்டும் இறைவன் மீதே ஒரு நிலைப்படுத்த
வேண்டும்.
27.प्रशान्तमनसं ह्येनं योगिनं
सुखमुत्तमम्।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्।।6.27।।
மனதை அமைதிப்படுத்தி, ஆசைகளை அடக்கி, பாவமற்ற புனிதனாய், எல்லாப்பொருட்களிலும்
இறைவனின் தொடர்பைக் காணும் யோகியானவன், அனைத்தையும் கடந்த பேரின்ப நிலையை எய்துகிறான்.
28.युञ्जन्नेवं सदाऽऽत्मानं योगी
विगतकल्मषः।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते।।6.28।।
தன்னை அடக்கிய யோகி, இறைவனுடன் ஒன்றி,
உலகப்பொருட்களால் மாசு படாமல் இருப்பதால், மகோன்னதமான பரமானந்த நிலையை அடைகிறான்.
29.सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि
चात्मनि।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः।।6.29।।
இறைவனுடன் உணர்வால் ஒன்றி விட்ட உண்மையான
யோகிகள், எல்லாவற்றையும் சமமாகப்பார்ப்பதுடன், இறைவனில் எல்லா உயிர்களையும், எல்லா
உயிர்களிலும் இறைவனையும் காண்கிறார்கள்.
30.यो मां पश्यति सर्वत्र सर्वं
च मयि पश्यति।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति।।6.30।।
என்னை எல்லா இடத்திலும் பார்ப்பவர்களும், எல்லாவற்றையும் என்னில்
பார்ப்பவர்களும், என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவர்களை ஒருபோதும் இழப்பதில்லை.
31.सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः।
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते।।6.31।।
என்னுடன் உணர்வால் ஒன்றி, என்னையே எல்லா உயிர்களிலும் இருக்கும்
பரம்பொருள் என்று வழிபடுகின்ற யோகியானவன், பல விதமான தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும்,
என்னுள்ளே வாழ்கிறான்.
32.आत्मौपम्येन सर्वत्र समं पश्यति
योऽर्जुन।
सुखं वा यदि वा दुःखं सः योगी परमो मतः।।6.32।।
அர்ஜுனா! அனத்து உயிர்களும் சமம் என்றே கண்டு, பிறருடைய இன்ப துன்பங்களைத், தனதே போல் பாவிப்பவரைத்தான்
நான் முழுமையான யோகி என்று கருதுகிறேன். “
33.अर्जुन उवाच
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्।।6.33।।
அர்ஜுனன்
கூறினான்: “மது சூதனா! நீ விளக்கிய யோக முறை என்னால் பின்பற்ற முடியாததாக இருக்கிறது.
ஏனென்றால், என் மனது ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.
34.चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि
बलवद्दृढम्।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्।।6.34।।
கிருஷ்ணா! வலிமையும், பிடிவாதமும் உள்ள இந்த மனமானது கொந்தளித்துக்கொண்டே
இருக்கிறது. காற்றைக் கட்டுப்படுத்துவதை விட, இந்த மனதைக்கட்டுப்படுத்துவது தான் கஷ்டம்
என்று தோன்றுகிறது.”
35.श्री भगवानुवाच
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलं।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते।।6.35।।
ஸ்ரீ பகவான் கூறினார்: குந்தியின் மகனே! வலிமையான தோள்களை உடையவனே!
நீ சொல்வது சரி தான். இந்த மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் தான். ஆனால், தொடர்ந்து
பயிற்சி செய்வதாலும், பற்றை விலக்குவதாலும், மனதைக் கட்டுப்படுத்தலாம்.
36.असंयतात्मना योगो दुष्प्राप
इति मे मतिः।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः।।6.36।।
கடிவாளம் இல்லாத மனமுடையவனால் யோக நிலையை
அடைய முடியாது. ஆனால், தன் மனதை அடக்கக் கற்றவர்களாலும், சரியான வழியில் தீவிரமாக முயற்சி
செய்பவர்களாலும் நிச்சயம் யோக நிலையை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன்.”
37.अर्जुन उवाच
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति।।6.37।।
அர்ஜுனன் கேட்டான்: “நம்பிக்கையுடன் யோகவழியில் பயணப்பட்ட ஒருவன்,
மனம் ஒரு நிலையில் நில்லாததால், யோக நிலையை அடைய வேண்டும் என்ற தன் குறிக்கோளில், இப்பிறவியில்
தோல்வி அடைந்து விட்டால், அவன் கதி என்னாகும்?
38.कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव
नश्यति।
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः
पथि।।6.38।।
வலிமையான தோள்களை உடையவனே!
யோக வழியில் இருந்து விலகிச் செல்பவன் இந்த உலக இன்பங்களையும் இழந்து, ஆன்மீக
வெற்றியும் கிட்டாமல், எங்கும் நிலை பெறாமல், தன் உருவம் சிதைந்து போகும் மேகத்தைப்போல
வீணாகி விடுவான் அல்லவா?
39.एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषतः।
त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते।।6.39।।
கிருஷ்ணா! தயவு செய்து, என்னுடைய இந்த சந்தேகத்தைப் போக்கு! உன்னைத்தவிர
வேறு யாரால் இதைச் செய்யமுடியும்?”
40.श्री भगवानुवाच
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते।
नहि कल्याणकृत्कश्िचद्दुर्गतिं तात गच्छति।।6.40।।
ஸ்ரீ பகவான் கூறினார்: “பார்த்தனே! ஆன்மீக வழியில் ஈடுபடுபவன்
இப்பிறவியிலோ, வரும் பிறவிகளிலோ, அழிவைச் சந்திப்பதில்லையப்பா! இறைவனை உணரும் நோக்கத்துடன்
முயற்சி செய்பவர்களைத் தீமை ஒருக்காலும் வெற்றி கொள்ள முடியாது.
41.प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा
शाश्वतीः समाः।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते।।6.41।।
இவ்வாறு முயன்றும், தன் குறிக்கோளில் வெற்றி பெறாத யோகிகள், தன்
உடலை உகுத்த பின்னர் நல்லோர் சென்றடையும் உலகங்களுக்குச் சென்று, அங்கு பல காலம் வசித்த
பின்னர் , நல்லொழுக்கமும், செல்வச்செழிப்பும் நிறைந்த குடும்பங்களில் பிறக்கிறார்கள்.
42.अथवा योगिनामेव कुले भवति धीमताम्।
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्।।6.42।।
தாங்கள் வாழும் போதே, பற்றை நீக்கியவர்கள், ஞானிகள் நிறைந்த குடும்பங்களில்
பிறக்கிறார்கள். ஆனால், இத்தகைய பிறப்பை இந்த உலகத்தில் அடைவது மிக மிகக்கடினம்.
43.तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम्।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन।।6.43।।
குரு வம்சத்தோன்றலே! ஒருவேளை அப்படிப்பட்ட பிறவி அவர்களுக்குக்
கிடைத்தால், தங்கள் முற்பிறவியில் பெற்ற ஞானத்துடன், மேலும் கடினமாக முயற்சி செய்து,
யோகத்தில் முழுமை பெறுகிறார்கள்.
44.पूर्वाभ्यासेन तेनैव ह्रियते
ह्यवशोऽपि सः।
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते।।6.44।।
தங்கள் முற்பிறவியின் தவப்பயனாய்த், தங்களை அறியாமலேயே அவர்கள்
இறைவனை நோக்கிக் கவரப்படுகிறார்கள். அத்தகைய தேடுதல் உடையவர்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகளினின்றும் மேலே எழும்பி விடுகிறார்கள்.
45.प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम्।।6.45।।
இந்த யோகிகள், மேலும் தங்கள் குறிக்கோளில் முன்னேற முயற்சிக்கும்
போது, பல பிறவிகளில் சேர்த்த புண்ணியங்களின் பலனாக, உலக ஆசைகள் என்னும் மாசில் இருந்து
தூய்மைப் படுத்தப்பட்டு, இப்பிறவியிலேயே உன்னத நிலையை அடைகிறார்கள்.
46.तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि
मतोऽधिकः।
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन।।6.46।।
யோகியானவன் தவம் செய்பவனைக் காட்டிலும் , ஞானியைக்காட்டிலும்,
சடங்குகளை ஒழுங்காகச் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்தவன். ஆகவே, அர்ஜுனா! நீ ஒரு யோகியாக
முயற்சி செய்!
47.योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना।
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो
मतः।।6.47।।
அத்தகைய யோகியருக்குள்ளும், என்னைப்பொருத்த மட்டில், யார் என்னில்
தங்கள் மனத்தைச் செலுத்தி, மிகுந்த சிரத்தையுடன் என்னை பஜிக்கிறார்களோ, அவர்களே எல்லாரைக்
காட்டிலும் சிறந்த யோகிகள்.
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/5418925478021061341
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
No comments:
Post a Comment