Sunday, 11 February 2024

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

எட்டாவது  அத்தியாயம்

அக்ஷர ப்ரம்ம யோகம்

 

(பரப்பிரம்மத்தின் அழிவற்ற தன்மையைப்பற்றியும், பரம்பொருளையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அவனை அடைய முடியும் என்பதையும், இறைவனை அடைந்தவர்கள், பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுகிறார்கள் என்பதையும்,, இந்த உலகங்கள் எல்லாம், திரும்பத்திரும்ப அழிந்தாலும், மீண்டும் மீண்டும் தோன்றினாலும், இறைவனை அடைந்து விட்டவர்கள் அந்த மாற்றங்களால் பாதிக்கப் படுவதில்லை என்பதையும், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.)

 

 

(அழிவற்ற பரம்பொருளைப்பற்றிய அறிவு)

 

1.     अर्जुन उवाच

किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते।।8.1।।
 

அர்ஜுனன் கேட்டான்: “ புருஷோத்தமா! ‘ப்ரம்மம்’ என்பது எது? ‘அத்யாத்மம்’ என்பது எது? ‘கர்மா’ என்பது என்ன? ‘அதி பூதம்’ என்பது என்ன, ‘அதி தைவம்’ என்பது என்ன?

 

2.     अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः।।8.2।।

 

மதுசூதனா! நம் உடலில் இருக்கும் ‘அதியக்ஞன்’ என்பவன் யார்? நிலையாக உன் மேல் பக்தி கொண்டவர்கள் மரணத்தருவாயில் உன்னை எப்படி அறிகிறார்கள்?”

 

3.     श्री भगवानुवाच

अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः।।8.3।।

 

ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “அழிவற்ற பரம்பொருள் ‘ப்ரம்மம்’ எனப்படுகிறது. ஒருவருடைய தனிப்பட்ட ஆத்மா ‘அத்யாத்மம்’ எனப்படுகிறது. இந்த உலகில் உள்ள உயிர்கள் செய்யும் செயல்களும், அவைகளின் வளர்ச்சியும், அவைகள் கொடுக்கும் பலன்களும் ‘கர்மா’ என்றழைக்கப்படுகின்றன.

 

4.     अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम्।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर।।8.4।।


 மனிதருள் சிறந்தவனே! எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகப்பொருட்கள் ‘அதிபூதம்’ என்றழைக்கப்படுகின்றன. இந்தப் படைப்பை வழி நடத்தும் தேவதைகளுக்கெல்லாம் தலைவன், ‘அதிதைவம்’ என்றழைக்கப்படுகிறான். எல்லா உயிர்களுக்குள்ளும் உட்பொருளாக வசிக்கும் நான், வேள்விகளுக்கெல்லாம் தலைவனாகையால், ‘அதியக்ஞன்’ என்றழைக்கப்படுகிறேன்.

 

5.     अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम्।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः।।8.5।।

 

மரணத்தருவாயில் என்னை நினைத்துக்கொண்டே உடலை நீக்குபவர்கள் என்னிடம் வந்து சேர்கிறார்கள். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

 

6.     यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः।।8.6।।

 

 குந்தியின் புதல்வனே! மரணம் அடையும் போது ஒருவன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதைப்பற்றிய எண்ணங்களிலேயே மூழ்கியிருப்பதால், இறந்த பின் அதுவாகவே ஆகிறான்.

 

7.     तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम्।।8.7।।
 

ஆகவே, என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டு, போர் புரியும் உன் கடமையைச்செய். உன் மனதையும், புத்தியையும் எனக்கு சமர்ப்பித்து விட்டால், நீ நிச்சயம் என்னை அடைவாய். இதில் சந்தேகம் இல்லை.

 

8.     अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्।।8.8।।
 

பார்த்தனே! பரம்பொருளாகிய என்னையே எப்போதும் மனதில் நினைத்துக்கொண்டு, சற்றும் பிசகாமல், தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், நிச்சயம் என்னை அடைவாய்.

 

9.     कविं पुराणमनुशासितार  मणोरणीयांसमनुस्मरेद्यः।
सर्वस्य धातारमचिन्त्यरूप  मादित्यवर्णं तमसः परस्तात्।।8.9।।

 

இறைவன் அனைத்தும் அறிந்தவன், மிக மிகப்பழமையானவன், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன், நுண்ணியவற்றிலெல்லாம் நுண்மையானவன், அனைத்துக்கும் துணையானவன், நினைத்துப்பார்க்க முடியாத தெய்வீக வடிவம் கொண்டவன். சூரியனைக்காட்டிலும் பிரகாசமானவன், அதே சமயம், இருளைக் காட்டிலும் இருட்டானவன்.

 

10.प्रयाणकाले मनसाऽचलेन  भक्त्या युक्तो योगबलेन चैव।
     भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक्  स तं परं पुरुषमुपैति दिव्यम्।।8.10।।

 

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன், நிலையான மனத்துடன், யோகப்பயிற்சியின் மூலம் , உயிர்ச்சக்தியை புருவங்களுக்கு மத்தியில் வைத்து பரம்பொருளைத் தியானித்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் இறைவனை அடைகிறான்.

 

 

11.यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः।
  यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये।।8.11।।

வேதவிற்பன்னர்கள் ‘அழிவற்றவன்’ என்று வர்ணிக்கிறார்கள். தவசிரேஷ்டர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து, அவனுடன் கலந்து விட முயற்சிக்கிறார்கள். இறைவனை அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடையும் வழியை, உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன், கேள்!

 

12.सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च।
    मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम्।।8.12।।
 

உடலின் எல்லாக் கதவுகளையும் மூடி, மனதை மார்புப்பகுதியில் செலுத்தி, உயிர்ச்சக்தியை தலைக்கு எடுத்துச்சென்று, தியானத்தில் நிலையாக நிற்க வேண்டும்.

 

13.ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन्।
    यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम्।।8.13।।
 

பரம்பொருளாகிய என்னை நினைத்துக்கொண்டு, ‘ஓம்’ என்னும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, இந்த உடலை விட்டு நீங்குபவன் உன்னதமான பரமபதத்தை அடைகிறான்.

 

14.अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः।
  तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः।।8.14।।
 

பார்த்தனே! என்னைப் பிரத்தியேகமான பக்தியுடன் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் யோகிகள், என்னுள் எப்போதும் மூழ்கி இருப்பதால், என்னை அவர்களால் எளிதில் அடைய முடியும்.

 

15.मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम्।
  नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः।।8.15।।

 தங்கள் முயற்சியில் முழுமையடைந்த அந்த மகாத்மாக்களுக்கு, நிலையில்லாததும், துன்பம் நிறைந்ததுமாகிய மறு பிறப்பு கிடையாது.

 

16.आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन।
  मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते।।8.16।।
 

அர்ஜுனா! குந்தியின் மகனே! பிரம்ம லோகம் வரையுள்ள இந்தப்படைப்பில், எந்த உலகத்தில் பிறந்தாலும், மறுபிறவி என்பது உண்டு. ஆனால், என்னிடம் வந்தவர்களுக்கு மறுபிறவியே இல்லை.

 

17.सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः।
  रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः।।8.17।।
 

பிரம்மாவின் ஒரு நாள் என்பது ஆயிரம் மஹாயுகங்கள் ( நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹாயுகம்) சேர்ந்தது. அவருடைய இரவும் அதே போலத்தான். ஞானிகள் பகல், இரவைப்பற்றிய இந்த உண்மையை அறிவார்கள்.

 

18.अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे।
  रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके।।8.18।।

 

பிரம்மாவின் ஒரு நாள் விடியும் பொழுது, உருவமில்லாத பரம்பொருளிடமிருந்து உயிரினங்கள் வெளிப்படுகின்றன. அந்த நாள் முடியும் போது அவையனைத்தும் மீண்டும் அந்த உருவமற்ற பரம்பொருளுக்குள்ளே அடங்கிவிடுகின்றன.

 

19. भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते।
   रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे।।8.19।।
 

பார்த்தனே! அதாவது, ஒவ்வொரு முறையும் பிரம்மாவின் நாள் விடியும் பொழுது, ஆயிரக்கணக்கான உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறக்கின்றன.  பிரம்மாவின் இரவு தொடங்கும் போது அனைத்து உயிர்களும், உருவமற்ற பரம்பொருளில் லயித்து உருவம் இல்லாமல் போகின்றன. பிரம்மாவின் அடுத்த நாள் விடியும் பொழுது, அவை மீண்டும் பிறக்கப்போகின்றன.

 

20.परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः।
  यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति।।8.20।।
 

வெளிப்படாமலும், வெளிப்பட்டும், தோன்றும் இந்தப்படைப்பையும் தாண்டி, என்றுமே அழியாத  ஒரு பரிமாணம் இருக்கிறது.  மற்ற உலகங்கள் இல்லாமல் போகும் போது கூட, அந்தப்பரிமாணம் இல்லாமல் போவதில்லை.

 

21.अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम्।
  यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम।।8.21।।
 

உருவமற்றிருக்கும் அந்தப்பரிமாணம் தான் என்னுடைய மேலான இருப்பிடம். அதை அடைவது தான் ஒருவனுக்கு மகத்தான லட்சியம். அதை அடைந்த பின், ஒருவன் இந்த அழியும் உலகத்துக்கு வருவதில்லை. .

 

22.पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया।
  यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम्।।8.22।।
 

இங்கிருப்பதிலேயே, எல்லாவற்றையும் விட உயர்ந்தது அந்தப்பரம்பொருள் தான். அவர் எல்லா இடங்களிலும் இருந்தாலும், எல்லா உயிர்களும் அவருள்ளே இருப்பது உண்மையானாலும், அவரை பக்தியால் மட்டுமே அடைய முடியும்.

 

23.यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः।
  प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ।।8.23।।

 

பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இந்த உலகத்தை விட்டுப்போகும் போது, இனி பிறக்காமல் மோக்ஷம் அடையும் வழியையும், மீண்டும் பிறவிகள் எடுப்பதற்கான வழியையும் இப்போது உனக்குச் சொல்கிறேன்.

 

24. अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम्।
   तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः।।8.24।।

 பிரம்மத்தை அறிந்தவர்கள், உத்தராயண புண்யகாலத்து ( சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் காலம்) வளர்பிறையில், பகலில் மரணித்தால், பரம்பொருளையே அடைகிறார்கள்.

 

25.धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम्।
  तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते।।8.25।।
 

வைதிக சடங்குகளை ஒழுங்காகச் செய்தவர்கள், தக்ஷிணாயன புண்யகாலத்துத்(சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் காலம்) தேய்பிறையில், இரவில் மரணித்தால், மேலான உலகத்துக்குச் சென்று, அங்கே சில காலம் இருந்து விட்டு, மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்.

 

26.शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते।
  एकया यात्यनावृत्तिमन्ययाऽऽवर्तते पुनः।।8.26।।

 முதலில் கூறப்பட்ட ஒளி மயமான வழியும், பின்னர் கூறப்பட்ட இருள் மயமான வழியும் உலகில் எப்போதுமே இருப்பவை தான். ஒளியின் வழி மோக்ஷத்துக்கு வழி வகுக்கிறது. இருளின் வழி, மறுபிறவிக்கு வழி வகுக்கிறது.

 

27.नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन।
  तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन।।8.27।।
 

பார்த்தனே! இந்த இரண்டு வழிகளின் ரகசியத்தை உணர்ந்த யோகிகள், என்ன செய்வது என்று திகைப்பதில்லை. ஆகவே, நீ எப்போதும் யோகத்தில் ஈடுபட்டு, இறைவனுடன் ஒன்றி இருப்பாயாக!

 

28.वेदेषु यज्ञेषु तपःसु चैव  दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम्।
 अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम्।।8.28।।
 

இந்த ரகசியத்தை உணர்ந்த யோகிகளுக்கு, வைதிக சடங்குகள் செய்பவர்கள், வேதம் கற்பவர்கள், வேள்விகள் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், தானம் செய்பவர்கள், ஆகியோர் பெறும்  புண்ணியத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக புண்ணியம் கிடைக்கிறது. அத்தகைய யோகிகள் பரமபதத்தை அடைகிறார்கள்.

 

சுபம்

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/6460284916642140424

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் பகவத் கீதை   பதினெட்டாவது அத்தியாயம் மோக்ஷ ஸந்நியாஸ யோகம்   துறத்தல் மற்றும் சரணாகதி        (எந்த நிலையிலும், நமக்கென்று...