ஸ்ரீமத் பகவத்
கீதை
இரண்டாம் அத்தியாயம்
தெரிந்து தெளிதல்
( ஸாங்கிய யோகம்)
(அர்ஜுனன் மிகுந்த துயரத்துடன் கூறிய
சொற்களைக் கேட்டு, லேசாகப் புன்னகைத்த கிருஷ்ணர்,
அவனுக்கு ஆத்மாவின் அழிவற்ற தன்மையை விளக்குகிறார். ஒருவன் தான் அணியும் உடை கந்தலாகி
விட்டால், அதை விட்டு விட்டு வேறு ஒரு புதிய உடையை அணிந்து கொள்வது போல, இந்த ஆத்மாவானது
தளர்ந்த உடலை நீக்கி ஒரு புதிய உடலைப் பெறுகிறது. பிறந்தவரெல்லாம் இறப்பதும், இறந்தவர்
மீண்டும் பிறப்பதும் மாறாத விதி. ஆகவே, நம்மால் மாற்ற முடியாத ஒன்றுக்காக நாம் கவலைப்
படக்கூடாது. புலன்களை ஆமை போல் அடக்கிக் கொண்டு, விருப்பு வெறுப்பு இன்றி, எதையும்
தன்னுடையது என்று எண்ணாமல் தன் கடமையைச் செய்பவனே 'ஸ்தித ப்ரக்ஞன்' எனப் படுகிறான்
என்று விளக்கி, அர்ஜுனனின் கடமை தர்மத்திற்காகப் போர் புரிவது தான் என்பதைக் கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார்.)
1. सञ्जय उवाच
तं तथा कृप्याविष्टमश्रुपूर्णकुलेक्षणम्।
विषिदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥1॥
சஞ்சயன் கூறினார்: “இரக்கம் மீதூறித், துயரம் தோய்ந்த மனத்துடனும்,
நீர் நிரம்பிய கண்களுடனும் இருந்த அர்ஜுனனைப் பார்த்து, ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறினார்:
2. श्री भगवानुवाच
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन।।2.2।।
ஸ்ரீ பகவான் கூறினார்:
என் அன்புக்குரிய அர்ஜுனா! இப்படிப்பட்ட அபாயம் நிறைந்த நேரத்தில்
இப்படி ஒரு குழப்பம் உனக்கு எப்படி வந்தது? ஒரு கௌரவமான மனிதனுக்கு இது அழகல்லவே! இது
ஒருவனை மேல் நிலைக்குக் கொண்டு செல்லாது; மாறாக, அவனுக்கு அவமானத்தைத் தேடித்தரும்.
3.
क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप।।2.3।।
ஓ பார்த்தனே! எதிரிகளை வெற்றி கொள்பவனே! ஆண்மையற்ற இந்த நிலைக்கு
ஆளாவது உனக்குத் தகுதியானது அல்ல. எதிரிகளை அழித்தொழிப்பவனே! இப்படிப்பட்ட சின்னத்தனமான
பலவீனத்தை விட்டொழித்து விட்டு எழுவாயாக!”
4.
अर्जुन उवाच
कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन।।2.4।।
அர்ஜுனன் கூறினான்: “ஓ மதுசூதனா! எதிரிகளை அழிப்பவனே! பூஜிக்கத்தக்க
பீஷ்மர் மேலும், துரோணர் மேலும் என்னால் எப்படி அம்பு செலுத்த இயலும்?
5.
गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्।।2.5।।
இப்படிப்பட்ட மேலான பெரியோர்களைக் கொன்று வாழ்க்கை இன்பத்தைத்
துய்ப்பதை விட, பிச்சையெடுத்து உண்பதே சிறந்ததாக இருக்கும். அவ்வாறு அவர்களைக்கொன்று
செல்வத்தையும் இன்பங்களையும் அனுபவித்தால் அவை ரத்தக்கறை படிந்தவையாகவே இருக்கும்.
6.
न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः।
यानेव हत्वा न जिजीविषाम स्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः।।2.6।।
போரின் முடிவில் அவர்களை நாம் வெல்வது நல்லதா அல்லது அவர்களால்
நாம் வெல்லப்படுவது நல்லதா என்று கூட நமக்குத் தெரியாது. அவர்களைக் கொன்ற பிறகு நாம்
வாழ விரும்ப மாட்டோம். ஆயினும், என்ன செய்ய? அவர்கள் இந்தப்போர்க்களத்தில், திருதராஷ்டிரனின்
புதல்வர்களின் அணியில், நமக்கு எதிராக நின்றுகொண்டிருக்கிறார்கள்!
7.
कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि
त्वां धर्मसंमूढचेताः।
यच्छ्रेयः स्यान्निश्िचतं
ब्रूहि तन्मे
शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्।।2.7।।
என் கடமை எது என்பதில் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. கவலையும்,
துணிவின்மையும் என்னைப் பாடாய்ப் படுத்துகின்றன. நான் உன் சீடன். உன்னையே சரணடைந்துள்ளேன்.
தயவு செய்து எனக்கு எது நன்மை பயக்கும் என்பதை எனக்கு உபதேசிப்பாயாக!
8.
न हि प्रपश्यामि ममापनुद्या द्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्।
अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्।।2.8।।
என் புலன்களையெல்லாம் உலரச்செய்யும் இந்தத்துயரத்தைப் போக்க வழி
தெரியாமல் தவிக்கிறேன். போட்டியே இல்லாமல் இந்த உலகத்தின் அதிகாரத்தையும், செல்வங்களனைத்தையும்
நான் பெற்றாலும், மற்றும் தேவர்களை ஆளும் அதிகாரமும் அடையப் பெற்றாலும், இந்தச் சோகத்தை
என்னால் விலக்க முடியாது.”
9.
सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तप।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह।।2.9।।
சஞ்சயன் கூறினார்:
“ இவையனைத்தையும் கூறிவிட்டு, எதிரிகளைத்
தண்டிக்கும் திறன் படைத்த அர்ஜுனன், புலன்களின் தலைவனான ஹ்ரிஷீகேசனைப் பார்த்து, “கோவிந்தா!
நான் போரிட மாட்டேன்” என்று கூறி விட்டு அமைதியாகி விட்டான்.
10.तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः।।2.10।।
ஓ த்ருதராஷ்டிரரே! பின்னர் அந்த இரு சேனைகளுக்கு
நடுவில், சோகம் நிறைந்த அர்ஜுனனுடன் ஸ்ரீ கிருஷ்ணர், புன்னகையுடன் பேசலானார்.
11.श्री भगवानुवाच
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः।।2.11।।
“அறிவார்ந்த வார்த்தைகளைப்பேசுகிறாய்,
ஆனால், வருந்துவதற்குத் தகுதியில்லாதவற்றுக்காக வருத்தம் கொள்கிறாய். அறிஞர்கள் இறந்தவர்களுக்காகவோ,
உயிருடன் இருப்பவர்களுக்காகவோ கவலைப்படுவதில்லை.
12.
न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न
भविष्यामः सर्वे वयमतः परम्।।2.12।।
எந்தக்காலத்திலும், நானோ, நீயோ அல்லது
இந்த அரசர்களோ இல்லாமல் இருந்ததில்லை. எதிர்காலத்திலும்,
நம்முள் யாரும் இல்லாமல் இருக்கப்போவதில்லை.
13.
देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न
मुह्यति।।2.13।।
தேகத்திலிருக்கும் இந்த ஆத்மா எவ்வாறு குழந்தைப்பருவம், இளமைப்பருவம்,
முதுமை ஆகிய மாற்றங்களுக்கு உட்படுகிறதோ, அதே போன்று உயிர் பிரிந்த பின்னர் இன்னொரு
உடலுக்குள் செல்கிறது. புத்திசாலிகள் இதற்காக வருந்துவதில்லை.
14.मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत।।2.14।।
குந்தியின் புதல்வனே! புலன்களுக்குப்
பொருட்களுடன் தொடர்பு ஏற்படும் போது இன்பம், துன்பம் போன்ற நிலையற்ற உணர்வுகள், உண்டாகின்றன.
பரத குலத்தின் வழித்தோன்றலே! இவற்றாலெல்லாம் துன்பமடையாமல், அவற்றைப் பொறுத்துக் கொள்ள
வேண்டும்.
15.
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते।।2.15।।
மாந்தர்களுள் ஏறு போன்றவனே! இன்பத்தினாலும்,
துன்பத்தினாலும் பாதிக்கப் படாமல், இரண்டு நிலைகளிலும் ஒன்றே போல் நிலையாக இருப்பவர்கள்
மட்டுமே முக்திக்குத் தகுதி படைத்தவர் ஆகிறார்கள்.
16.நிலையற்றது
நிலைத்திருப்பதில்லை. நிலையானது என்றும் இல்லாமல் போவதில்லை. இவ்விரண்டின் உண்மைத்
தன்மைகளைக் கண்டுணர்ந்த சான்றோர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
17.
இந்த உடல் முழுவதும் வியாபித்திருக்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிவாயாக! அழியாத ஆத்மாவை
யாராலும் அழிக்க முடியாது.
18.இந்த
உடல் மட்டுமே அழியக்கூடியது. அதற்குள் இருக்கும் ஆத்மா, அழிக்க முடியாததும், அளவிடமுடியாததும்,
நிரந்தரமானதும் ஆகும். ஆகவே, பரத வம்சத்தோன்றலே! நீ போர் புரிவாயாக!
19.இந்த
ஆத்மாவால் கொல்ல முடியும் என்றோ, அது கொல்லப்படக்கூடும் என்றோ எண்ணுபவர்கள் உண்மையை
அறியாதவர்கள். இது யாரையும் கொல்வதும் இல்லை; யாராலும் கொல்லப்படுவதும் இல்லை.
20.இந்த
ஆத்மா ஒரு போதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. எப்போதும் இருக்கும் அது, ஒரு
போதும் இல்லாமல் போவதில்லை. ஆத்மாவுக்குப் பிறப்பு இல்லை. அது நிரந்தரமானது, மரணமற்றது.
அதற்கு எப்போதும் வயதாவதே இல்லை. இந்த உடல்
அழியும் போதும், ஆத்மா அழிவதில்லை.
21.பார்த்தனே!
இந்த ஆத்மா அழிவற்றது, நிரந்தரமானது, பிறப்பற்றது, மாற்றம் அடையாதது என்று அறிந்தவன்
எவ்வாறு ஒருவனைக் கொல்ல முடியும் அல்லது மற்றொருவனைக் கொல்ல வைக்க முடியும்?
22.ஒரு
மனிதன் எவ்வாறு பழைய, நைந்து போன துணிகளை நீக்கி
விட்டுப், புதிய உடைகளை அணிந்து கொள்கிறானோ, அதே போல, ஆத்மா, தான் இருக்கும் நைந்து
போன உடலில் இருந்து நீங்கி, ஒரு புதிய உடலில் புகுந்து கொள்கிறது.
23.ஆயுதங்களால்
ஆத்மாவைத் துளைக்க முடியாது. நெருப்பால் அதனை எரிக்க முடியாது. தண்ணீரால் அதனை நனைக்க
முடியாது. காற்றால் அதனை உலர்த்த முடியாது.
24.எதனாலும்
ஆத்மாவை உடைக்க முடியாது; அதனைப்பற்ற வைக்க முடியாது; அதனை ஈரமாக்க முடியாது; அதனை
உலர்த்தவும் முடியாது. அது எல்லா இடங்களிலும், எப்போதும் இருக்கக்கூடியது; அது மாற்ற
முடியாதது; சிதைக்க முடியாதது. ஆரம்பத்திலிருந்தே இருப்பது.
25.ஆத்மா
கண்ணுக்குப்புலப்படாதது; மனதால் நினைத்துப்பார்க்க முடியாதது; மாற்ற முடியாதது. இதை
அறிந்து கொண்ட பின், உடலுக்காக நீ வருந்தக்கூடாது.
26.ஆயினும்,
இந்த ஆத்மா தொடர்ந்து பிறப்பு, இறப்புக்கு உட்படுகிறது என்றே நீ நினைத்தாலும், நீ இவ்வாறு
கவலைப்படக்கூடாது.
27.பிறந்தவர்கள்
மரணம் அடைவதைத் தவிர்க்க முடியாது. இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதையும் தவிர்க்க முடியாது. ஆகவே, நம்மால்
தவிர்க்க முடியாத விஷயங்களுக்காக வருத்தப்படக்கூடாது.
28.படைக்கப்பட்ட
உயிர்கள் அனைத்தும், பிறப்பதற்கு முன், உருவமற்று இருக்கின்றன; இடையில் உருவத்துடன்
வெளிப்படுகின்றன; இறந்த பிறகு, மீண்டும், உருவத்தை இழந்து விடுகின்றன. ஆகவே, எதற்காகத்
துன்பப்படவேண்டும்?
29.இந்த
ஆத்மாவை, ஆச்சரியப்படத் தக்கதாக சிலர் பார்க்கிறார்கள். சிலர் இதை ஆச்சரியப்படத் தக்கது
என்று வர்ணிக்கிறார்கள்; மற்றும் சிலர் இதை ஆச்சரியப்படத் தக்கது என்று பிறர் கூறக்கேட்கிறார்கள்.
வேறு சிலரோ அப்படிப்பிறர் சொல்லக் கேட்டாலும், அதைப் புரிந்து கொள்வதில்லை.
30.அர்ஜுனா!
இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது. ஆகவே நீ யாருடைய இறப்புக்காகவும் துயரப்பட
வேண்டியதில்லை.
31.
மேலும், ஒரு க்ஷத்திரியன் என்ற வகையில், உன் கடமையைச் செய்யும் போது நீ தடுமாறக்கூடாது.
ஏனெனில், ஒரு போர்வீரனுக்கு, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகப் போரிடுவதை விட மேலான செயல்
எதுவும் இல்லை.
32.பார்த்தனே!
தர்மத்தைக்காப்பாற்ற வேண்டிப் போர் புரியும் இந்த வாய்ப்பு, தேடாமலே வாய்க்கப்பெற்ற
போர்வீரர்கள் புண்ணியம் செய்தவர்கள். இப்படிப்பட்ட போர் அவர்களுக்கு ஸ்வர்க்கத்துக்கான
வாயிலைத் திறந்து விடும்.
33.இப்படியிருக்க,
உன் சமூகக்கடமையையும், உன் புகழையும் கை விட்டு விட்டு, இந்த தர்மயுத்தத்தில் நீ போரிட
மறுத்தால், உனக்கு நிச்சயம் பாவம் உண்டாகும்.
34.மக்கள்
உன்னைக் கோழையென்றும், போரை விட்டு விட்டுப்போனவன் என்றும் இகழ்வார்கள். ஒரு கௌரவமான
மனிதனுக்கு, கெட்ட பெயர் வாங்குவது மரணத்தை விட மோசமானது.
35.உன்
மேல் மிக்க மரியாதை வைத்திருக்கும் படைத்தலைவர்கள் , நீ பயத்தினால் போர்க்களத்தை விட்டு
ஓடி விட்டாய் என்று நினைப்பார்கள். உன் மேல் அவர்களுக்கு இருக்கும் மரியாதையெல்லாம்
போய்விடும்.
36.
உன்னுடைய எதிரிகள் கடுமையான வார்த்தைகளால் உன்னை இகழ்ந்து, உன் வல்லமையைக் கேவலப்படுத்துவார்கள்.
அந்த நிலைமையைக் காட்டிலும் வலி நிறைந்தது வேறு ஏதாவது உண்டா?
37.நீ
போர் புரிந்தால், ஒன்று, போர்க்களத்தில் கொல்லப்பட்டு வீரசுவர்க்கம் அடைவாய். அல்லது,
வென்றால், இந்த உலகில் அரச இன்பம் துய்ப்பாய். ஆகவே, குந்தியின் புதல்வனே! உறுதியுடன்
எழுந்து போர் புரியத் தயாராகு!
38.இன்பத்தையும்,
துன்பத்தையும், லாபத்தையும், நஷ்டத்தையும், வெற்றியையும், தோல்வியையும் சமமாகக்கருதி,
கடமை உணர்வுடன் போர் செய்! இவ்வாறு உன் பொறுப்பை
நிறைவேற்றுவதால் உனக்கு ஒரு போதும் பாவம் வராது.
39.இது
வரை, புத்தியை உபயோகித்து, இயற்கையையும், ஆத்மாவையும் பகுத்து அறியும் ஸாங்க்ய யோகத்தை
உனக்கு விளக்கியிருக்கிறேன். பார்த்தனே! இவ்வாறு புரிதலுடன் செயல் புரியும் போது செய்கைகளினால்
வரும் பந்தங்களில் இருந்து நீ விடுதலை பெறுகிறாய்!
40.இத்தகைய
விழிப்புணர்வுடன் செயல் புரியும் போது, இழப்போ, அல்லது பாதகமான பலனோ உண்டாவதில்லை.
சிறிய அளவு முயற்சி கூட, ஒருவனைப் பெரிய ஆபத்திலிருந்து காக்கும்.
41.குரு
வம்சத்தோன்றலே! இவ்வாறு உறுதியான வழியில் நடப்பவர்களின் அறிவு நிலையாக இருக்கும்; அவர்களுடைய
குறிக்கோள் ஒருமுனைப் பட்டிருக்கும். ஆனால் உறுதியற்றவர்களின் அறிவு பல கிளைகளாகப்
பிரிந்து, சிதறி இருக்கும்.
42.சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆடம்பரமான சடங்குகளைப்பற்றிய அலங்காரமான
வார்த்தைகளினால் கவரப்பட்டு, அவற்றைச் செய்து விட்டாலே ஸ்வர்க்கம் கிடைத்து விடும்
என்றும், அதைத் தவிர உயர்ந்த செய்திகள் ஒன்றும் வேதங்களில் கூறப்படவில்லை என்றும் நினைக்கின்றனர்.
43.வேதங்களின்
அந்தப்பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தாங்கள் மேலான குடிப்பிறப்பு,
செல்வம், வாழ்வில் இன்பம் மற்றும் மேலுலகம் அடைவதற்காக , ஆடம்பரமான சடங்குகளையும்,
சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கிறார்கள்.
44.
அவர்களின் மனம் வாழ்வின் சுகங்களில் தீவிரப்பற்று கொண்டிருக்கிறது. அவர்களின் அறிவோ, இத்தகைய விஷயங்களைக் கண்டு திகைக்கிறது. இறைவனை
அடையும் வழியில் வெற்றி பெறுவதற்கான உறுதி அவர்களிடம் இல்லை.
45.ஓ
அர்ஜுனா! சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று வகை இயல்புகளைப்பற்றி வேதங்கள் பேசுகின்றன.
இந்த மூன்று நிலைகளில் இருந்தும் உயர்ந்து, ஆத்ம விழிப்புணர்வை அடைவாயாக! ஒன்றுக்கொன்று
மாறுபட்டிருக்கும் விஷயங்களில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு, உண்மையின் உள்ளே
உன்னை நிரந்தரமாகப் பொருத்திக்கொண்டு, பொருளாதார லாபத்தையோ, பாதுகாப்பையோ பற்றிக் கவலைப்படாமல்,
உனக்குள்ளேயே நிலைத்திருப்பாயாக!
46.ஒரு
கிணற்றின் நீர் எதற்கெல்லாம் பயன் படுமோ, அதற்கெல்லாம், ஒரு பெரிய ஏரியின் நீரும் பயன்படும்.
அதே போல, முழு உண்மையை உணர்ந்தவன் வேதங்களின் நோக்கத்தையும் நிறைவேற்றுகிறான்.
47.
உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்குத்தான் உனக்கு உரிமை இருக்கிறது. ஆனால்,
அந்தச் செயல்கள் தரும் பலன்களின் மேல் உனக்கு உரிமை இல்லை. உன் செயல்களின் விளைவுகளுக்கெல்லாம்
நீ தான் காரண கர்த்தா என்று நினைக்காதே. அதற்காக, எந்த செயலையும் செய்யாமலும் இருந்து
விடாதே.
48.
அர்ஜுனா! வெற்றியிலும், தோல்வியிலும் சம்பந்தப்படாமல், உன் கடமைகளைச் செய்வதில் உறுதியுடன்
இரு. அப்படிப்பட்ட சமநிலையே யோகம் எனப்படுகிறது.
49.
அர்ஜுனா! தெய்வீக அறிவைப்பெற முயற்சி செய். பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள்
தெய்வீக அறிவில் தோய்ந்து, செய்யப்படும் செயல்களை விடக் கீழ்த்தரமானவை. அத்தகைய கீழ்த்தரமான
செயல்களை விட்டு விடு. தங்கள் செயல்களின் பலன்களைத் தாங்களே அனுபவிக்க விரும்புபவர்கள்
கருமிகள்.
50.
பலன்களின் மேல் பற்று வைக்காமல், விவேகத்துடன் செயலாற்றுபவன், இப்பிறவியிலேயே தன் செயல்களினால்
விளையும் நல்ல அல்லது கெட்ட விளைவுகளைத் தவிர்க்க முடியும். ஆகவே திறமையுடன் செயலாற்ற
முயல்வாய்! திறமையாக செயல்படுவதே யோகம் எனப்படுகிறது.
51.அறிவுச்சமநிலை
அடைந்த ஞானிகள் தங்கள் செயல்களின் விளைவுகளின் மேல் உள்ள பற்றைத் துறந்து விடுகிறார்கள். ஏனெனில், அப்பற்று
நம்மைப் பிறப்பு-இறப்பு சுழற்சியில் கட்டிப்போட்டுவிடும். இப்படிப்பட்ட விழிப்புணர்வுடன்
செயல்களைச் செய்யும் போது, துன்பமற்ற நிலையை அடையலாம்.
52.உன்னுடைய
அறிவு, மாயை என்னும் புதைகுழியைக் கடந்த பின்னர், நீ கேட்ட செய்திகளும், கேட்கப்போகும்
செய்திகளும் உன்னை பாதிக்காத மன நிலையைப்பெற்று விடுவாய்.
53.
உன்னுடைய அறிவு வேதங்களில் காணப்படும், குறிப்பிட்ட பலன்களுக்காகச் சடங்குகள் செய்யும்
பகுதிகளால் கவரப்படாமல், தெய்வீக உணர்வில் நிலைத்து நிற்கும் போது, முழுமையான யோக நிலையை
அடையப்பெறுவாய்.”
54.அர்ஜுனன்
கேட்டான்: “கேசவா! தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பவனின் மன நிலை எவ்வாறு இருக்கும்?
அறிவொளி பெற்ற மனிதன் எவ்வாறு பேசுவான்? அவன் எப்படி அமர்வான்? எப்படி நடப்பான்?”
55.
ஸ்ரீ பகவான் கூறினார்: “பார்த்தனே! ஒரு மனிதன் எப்போது சுய நலம் மிக்க ஆசைகளையும்,
மனத்தைத் துன்புறுத்தும் ஏக்கங்களையும் நிராகரித்து விட்டுத், தன்னுணர்வில் தோய்ந்து
திருப்தி அடைகிறானோ, அவன் உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கிறான்.
56.
துன்பம் வரும் போது அதைத் தொந்தரவாக நினைக்காதவன், இன்பம் வேண்டும் என்று ஏங்காதவன்,
பற்று, பயம், கோபம் ஆகியவற்றைத் துறந்தவன், நிலையான ஞானத்தைப்பெற்ற முனிவன் என்று அழைக்கப்படுகிறான்.
57.
எந்த நிலையிலும், எதன் மேலும் பற்றில்லாமலும், நல்ல அதிருஷ்டம் வந்த போது அளவுக்கு
மீறிக் களிப்படையாமலும், இன்னல்கள் வந்த போது மனச்சோர்வு அடையாமலும், ஒன்றே போல் இருப்பவன்
முழுமையான ஞானம் கொண்ட முனிவன் ஆவான்.
58.தன்னுடைய
புலன்களை, அவை நாடிச்செல்லும் பொருட்களில் இருந்து விலக்கி, ஆமை தன் புலன்கள் அனைத்தையும்
கூட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல இழுத்துக்கொள்பவன் தெய்வீக ஞானத்தில் நிலை பெற்றிருக்கிறான்.
59.
மேல் நிலையை அடையும் ஆர்வம் உள்ளவர்கள், தங்களுக்கு இன்பம் கொடுக்கும் விஷயங்களில்
செல்லாமல் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும், அந்த விஷயங்களில் அவர்களுக்கு
உள்ள விருப்பம் அப்படியே தான் இருக்கிறது. ஆயினும், இந்த விருப்பம் கூட, பரம்பொருளை
உணர்ந்தவர்களிடத்தில் இல்லாமல் போகிறது.
60.
இந்தப் புலன்கள் எவ்வளவு வலிமையுடன் கொந்தளிக்கக்கூடியவை என்றால், நல்ல பகுத்தறிவும்,
சுயகட்டுப்பாடும் நிறைந்த ஒருவனின் மனதை, இவற்றால் கட்டாயப்படுத்தி இழுத்துச்சென்று
விட முடியும்.
61.தங்கள்
புலன்களை அடக்கித் தங்கள் மனங்களை எப்போதும் என்னில் ஆழ்ந்திருக்கும் படி செய்பவர்கள்,
நிறைவான அறிவில் நிலைத்திருக்கிறார்கள்.
62.
தங்கள் புலன்களுக்கு இன்பம் தரும் விஷயங்களைப்பற்றி நினைக்கும் போது, அவற்றின் மேல்
ஆர்வம் உண்டாகிறது. ஆர்வத்திலிருந்து
விருப்பம் உண்டாகிறது. விருப்பம் நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது.
63.
கோபம் குழப்பத்தை உண்டாக்குகிறது. குழப்பம் நினைவாற்றலைத் திகைக்கச் செய்கிறது. நினைவாற்றல்
திகைப்படையும் போது, அறிவாற்றல் அழிந்து போகிறது. அறிவாற்றல் அழிந்தவன், தானும் அழிந்து
போகிறான்.
64.
ஆனால், தன் மனத்தை அடக்கிப், பற்றையும் , வெறுப்பையும் அகற்றி விட்டவன், புலன்களுக்கு
வேண்டிய விஷயங்களை உபயோகப்படுத்தினாலும், இறைவனின் அருளைப்பெறுகிறான்.
65.இறைவன்
அருள் கிடைக்கும் போது, துயரங்களே இல்லாத மன அமைதி கிடைக்கிறது. அப்படிப்பட்ட அமைதி
நிறைந்த மனிதனின் அறிவாற்றல் விரைவிலேயே, இறைவனில் நிலைபெற்று விடுகிறது.
66.
ஆனால், தன் மனத்தையும் புலன்களையும் அடக்கி வைக்காத ஒரு மனிதனின் அறிவாற்றல் உறுதியாக
இருக்காது; அவனுக்கு இறைவன் மீதும் நிலையான தியானம் இருக்காது. இறைவனுடன் மனத்தை இணைத்துக்
கொள்ளாதவனுக்கு நிம்மதி என்பது கிடையாது. நிம்மதி இல்லாதவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன்
இருக்க முடியும்?
67.புலன் போன வழி, மனத்தைச் செலுத்திய மனிதனுடைய
அறிவாற்றல் , பலத்த காற்றினால், தன் வழியிலிருந்து அகற்றிச் செல்லப்படுகிற படகைப் போன்று , தவறான வழியில் கொண்டு செலுத்தப் படுகிறது.
68.
வலிமையுடைய தோள்களை உடையவனே! புலன்களை அவை நாடும் விஷயங்களில் செல்லாமல் கட்டுப்படுத்துபவன்
மேலான அறிவு நிலையில் நிலைபெற்றிருப்பான்.
69.பிறர்
பகல் என்று நினைத்துக்கொள்வது, ஞானிகளைப்பொருத்த வரை அறியாமை நிறைந்த இருட்டு. அதேபோல,
பிற உயிர்கள் இரவு என்று எதை எண்ணுகிறார்களோ, அதுவே சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஞானிகளுக்குப்
பகல் ஆகிறது.
( இந்த சுலோகம் மேம்போக்காகப் பார்க்கும் போது சரியாகப்புரியாது.
பகல் என்பது கேளிக்கைக்கும், வாழ்க்கையை அனுபவிப்பதற்குமான நேரம். அப்படி வாழ்க்கை
இன்பத்தைத் துய்க்காமல் இருக்கும் நேரம் தான் இரவு. ஞானிகளைப்பொருத்த மட்டில் சுயகட்டுப்பாட்டுடன்
கேளிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கும் நேரம் தான் அவர்களுக்கு சிறந்த நேரம் – அதாவது பகல்.
அவற்றில் ஈடுபட்டு நேரத்தைச் செலவிடுவது அவர்களுக்கு இரவு போன்றது.)
70.இடைவிடாமல்,
எல்லா திசைகளில் இருந்தும், பல நீர் நிலைகளில் இருந்தும், தண்ணீர் தனக்குள் வந்து கொண்டே
இருந்தாலும், சிறிதும் சலனமடையாமல் இருக்கும் சமுத்திரத்தைப்போல, தன்னைச்சுற்றித் தனக்கு
விருப்பமான பொருட்கள் இருந்த போதிலும், அவைகளால் சிறிதும் சலனமடையாமல் இருப்பவர் மன
அமைதி பெறுகிறார். ஆனால், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு
எந்நாளும் மன அமைதி கிடைப்பதில்லை.
71.
பொருட்களின் மீதுள்ள விருப்பத்தையெல்லாம் துறந்து, பேராசையின்றி, இது என்னுடைய பொருள்
என்ற எண்ணம் இன்றி, தன் முனைப்பின்றி இருப்பவர், முழுமையான அமைதி பெறுகிறார்.
72.
பார்த்தனே! விழிப்புணர்வு பெற்ற ஆத்மா மீண்டும்
மாயையில் சிக்குவதில்லை. மரணிக்கும் தருவாயிலும், இந்த உணர்வில் நிலைபெற்றிருப்பவர்,
பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, இறைவனை அடைகிறார்.
சுபம்
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
No comments:
Post a Comment