ஸ்ரீமத் பகவத் கீதை
பதினைந்தாவது அத்தியாயம்
மகத்தான தெய்வ வடிவின் விளக்கம்
(நாம் காணும் இந்த உலகை ஸ்ரீ க்ருஷ்ணர் வேர் மேல் புறமாகவும்,
கிளைகள் கீழ் நோக்கியும் உள்ள ஒரு ஆல மரத்துக்கு ஒப்பிடுகிறார். மனிதர்கள் இந்த மரத்தின்
இயல்பைப் புரிந்து கொள்வதில்லை. இறைவன் தான் இந்த மரத்துக்கு வேர் என்பதால் அவர் மேலே
இருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது. அனைத்து உயிர்கள் மூலமும் பிரகாசிப்பவன் இறைவன் தான்
என்பதை உணர்பவர்களே உண்மையான யோகிகள். முழுமையான சரணாகதி உணர்வுடன் இறைவனை வழிபடுவது
மூலம் நாம் இறைவனை நிச்சயம் அடையலாம் என்பது இந்த அத்தியாயத்தின் சாரம்.)
1.
श्री भगवानुवाच
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम्।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्।।15.1।।
ஸ்ரீ
பகவான் கூறினார்: “வேர்கள் மேலேயும், கிளைகள் கீழேயும் உள்ள ஒரு அரச மரத்தைப்பற்றிப்
பேசுகிறார்கள். வேத மந்திரங்களே அதனுடைய இலைகளாக இருக்கின்றனவாம். இந்த மரத்தின் ரசசியத்தை
அறிந்தவர் வேதங்களையெல்லாம் அறிந்தவராகிறார்.
2.
अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुण प्रवृद्धा विषयप्रवालाः।
अधश्च मूलान्यनुसन्ततानि
कर्मानुबन्धीनि मनुष्यलोके।।15.2।।
ஸத்வம்,
ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களால் ஊட்டமளிக்கப்பெற்ற அதன் கிளைகள் மேலும், கீழும்
பரவியுள்ளன. புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் யாவும் அதன் மொட்டுக்களாக உள்ளன.
அதன் வேர்கள் மேலும் பிரிந்து,
மனிதர்களைச் செயல்களால் கட்டுவித்துக் கீழ் நோக்கி வளர்கின்றன.
3.
न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा।
अश्वत्थमेनं सुविरूढमूल मसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा।।15.3।।
இந்த
மரத்தின் உண்மையான உருவத்தை இந்த உலகத்தில் காணமுடியாது. தொடக்கமும், முடிவும் இல்லாத
இந்த மரம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், ஆழமான வேர்கள் கொண்ட இந்த அரச
மரத்தைப் ‘பற்றுகளைக் களைதல்’ என்னும் வலிமை மிக்க கோடரியைக்கொண்டு வெட்டி விட வேண்டும்.
4.
ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन्गता न निवर्तन्ति भूयः।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी।।15.4।।
பின்னர்,
இந்த மரத்தின் அடிப்பாகமான இறைவனைத் தேடிப்போக வேண்டும். அவனிடத்தில் இருந்து தான்
வெகு காலத்துக்கு முன்னரே இந்தப்பிரபஞ்சத்தின் செயல்கள் புறப்பட்டன. அவனிடத்தில் சரணடைந்து
விட்டவர் மீண்டும் இந்த உலகத்துக்குத் திரும்புவதில்லை.
5.
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञै र्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत्।।15.5।।
கர்வமும்,
மோகமும் இல்லாதவர்கள், பற்று என்னும் தீமையில் இருந்து விடுபட்டவர்கள், தனது ஆத்மாவுக்குள்ளேயும்,
இறைவனுக்குள்ளேயும் ஆழ்ந்து இருப்பவர்கள், புலனின்பங்களைத் துய்ப்பதில் விருப்பம் இல்லாதவர்கள்,
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகியோர் என்னுடைய நிரந்தரமான இடத்தை அடைகிறார்கள்.
6.
न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम।।15.6।।
சூரியனாலோ,
சந்திரனாலோ, நான் வாசம் செய்யும் அந்த மகத்தான இடத்துக்கு ஒளி கொடுக்க முடியாது. அங்கு
வந்தவர்கள், இந்த லௌகிகமான உலகத்துக்குத் திரும்புவதில்லை.
7.
ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति।।15.7।।
இந்த
ஜீவலோகத்தில் வாழும் மனிதர்கள் யாவரும் நிரந்தரமானவனாகிய, என்னுடைய சிறு பகுதிகள் தாம்.
ஆனால், தங்களிடம் உள்ள இயல்பான குணங்களால், அவர்கள் தங்கள் மனத்தாலும், ஐந்து புலன்களாலும்,
உழன்று கொண்டிருக்கிறார்கள்.
8.
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः।
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात्।।15.8।।
காற்றானது
வாசனையை எடுத்துச் செல்வது போல, உடலில் உள்ள ஆத்மாவானது தன் உடலை நீக்கி, வேறொரு உடலில்
புகும் போது, அதன் மனம் மற்றும் புலன்களை எடுத்துச் செல்கிறது.
9.
श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते।।15.9।।
மனத்தினுடன்
இணைந்துள்ள உறுப்புக்களான கண், காது, மூக்கு, தோல், மற்றும் நாக்கின் மூலம், உடலுக்குள்
இருக்கும் ஆத்மா இங்குள்ள பொருட்களைப் பல விதமாக அனுபவிக்கிறது.
10.उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम्।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः।।15.10।।
அறியாமை நிறைந்த மனிதர்கள், உடலில் வசிக்கும் ஆத்மா தான்,
குணங்களுக்குட்பட்டுப் பொருட்களை அனுபவிக்கிறது என்பதையோ, அல்லது மரணத்தின் போது, அது
உடலை விட்டு நீங்குவதையோ உணர்வதில்லை. ஆனால், அறிவுக்கண் கொண்ட ஞானிகள் இவற்றை உணர்கிறார்கள்.
11.यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम्।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः।।15.11।।
யோகப்பயிற்சி
செய்யும் யோகிகளும், உடலில் வீற்றிருக்கும் ஆத்மாவை உணர்கிறார்கள். ஆனால், தூய்மையான
மனம் இல்லாதவர்கள், எவ்வளவு முயன்றாலும், இதை உணர முடியாது.
12.यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम्।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्।।15.12।।
சூரிய
குடும்பம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிற சூரியனின் ஒளி போன்றவன் நான் என்பதைத்
தெரிந்துகொள். என்னிடம் இருந்து தான், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் ஒளி கிடைக்கிறது.
13.गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः।।15.13।।
இந்தப்பூமியனைத்திலும்
பரவி, இங்குள்ள உயிர்களையெல்லாம், என் உயிர்ச் சக்தியால் காப்பாற்றுகிறேன். சந்திரன்
வடிவில் தோன்றித், தாவரங்களுக்கெல்லாம் என் உயிர்ச்சத்தை அளித்துக் காப்பாற்றுகிறேன்.
14.अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम्।।15.14।।
நான்
தான் வைஸ்வானரனாக (உணவை ஜீரணிக்கச் செய்யும் அக்னி) மாறி, எல்லா உயிர்களின் வயிற்றிலும்
இருக்கும் உணவை ஜீரணிக்கிறேன். அத்துடன், உள்ளே வரும் மூச்சுடனும், வெளியே செல்லும்
மூச்சுடனும், இணைந்து *நான்கு விதமான உணவுகளையும் ஜீரணித்து, அவற்றின் சக்தி உடலெங்கும்
பரவும் படி செய்கிறேன்.
*(நாம்
உண்ணும் உணவு நான்கு வகைப்படும் – 1. போஜ்யம் ( bhojyam) – மென்று சாப்பிடப்படுபவை;
2. பேயம் ( peyam)– குடிக்கப் படும் திரவ உணவுகள்; 3. கோஷ்யம் (koshyam)– உறிஞ்சிக் குடிக்கப் படுபவை;
4. லேஹ்யம் ( lehyam) – தேனைப்போல நாவினால்
நக்கி உண்ணப்படுபவை)
15.सर्वस्य चाहं हृदि सन्निविष्टो
मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो
वेदान्तकृद्वेदविदेव चाहम्।।15.15।।
அனைத்து
உயிர்களின் உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன். என்னில் இருந்து தான் நினைவாற்றல்,
அறிவு, மறதி ஆகியவை தோன்றுகின்றன. வேதங்களால் அறியப்பட வேண்டியவன் நானே; வேதாந்தத்தைச்
செய்தவனும் நானே; வேதங்கள் கூறும் பொருளை அறிந்தவனும் நானே.
16.द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते।।15.16।।
இந்தப்
படைப்பில், அழியக்கூடியவை, அழிவற்றவை என்ற இரண்டு விதமான உயிர்கள் உள்ளன. இந்த உலகில்
காணப்படும் அனைத்துப் பொருட்களும் அழியக்கூடியவை தான். மோக்ஷம் அடைந்தவர்கள் மட்டுமே
அழிவற்றவர்கள்.
17. उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः।।15.17।।
இவையன்றி,
அழிக்க முடியாத பரமாத்மா இருக்கிறார். எப்போதும் மாறாத அவர் இந்த மூவுலகுக்குள்ளும்
பிரவேசித்து, அங்குள்ள உயிர்களைத் தாங்குகிறார்.
18.यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः।।15.18।।
அழியக்கூடிய
பொருட்களை மட்டுமல்ல, அழிவே அற்ற ஆன்மாவையும் கடந்தவன் நான். எனவே தான், வேதங்களும்,
ஸ்ம்ருதிகளும் என்னைப் புருஷோத்தமன் என்று துதிக்கின்றன.
19.यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम्।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत।।15.19।।
நான்
தான் எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த புருஷோத்தமன் என்பதைச் சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டவர்களே முழுமையான ஞானம் பெற்றவர்கள்.
அர்ஜுனா! அவர்கள் தங்கள் முழு மனதுடன், என்னை
வழிபடுகிறார்கள்.
20.इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयाऽनघ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत।।15.20।।
பாவங்களற்றவனே!
வேதங்களில் காணப்படும் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.
அர்ஜுனா! இதைப்புரிந்து கொள்ளும் மனிதன் ஞான ஒளி பெறுவதுடன், செய்ய வேண்டிய செயல்களையும்
செய்து முடிக்கிறான்.
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/1780788808999465238
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
No comments:
Post a Comment