ஸ்ரீமத் பகவத் கீதை
பதினாறாவது அத்தியாயம்
தைவாசுர சம்பத் விபாக யோகம்
(இந்த அத்தியாயத்தில், தெய்வீக இயல்புடையவர்களிடத்தில்
காணப்படும் குணங்களையும், அசுர இயல்புடையவர்கள் இடத்தில் காணப்படும் குணங்களையும் விவரித்து,
அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதையும், அவர்களுக்கு அதனால் என்னென்ன விளைவுகள்
ஏற்படும் என்பதையும் விளக்கமாகக் கூறுகிறார், ஸ்ரீக்ருஷ்ணர்.)
1.
श्री भगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिः ज्ञानयोगव्यवस्थितिः।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम्।।16.1।।
ஸ்ரீ
பகவான் கூறினார்: “பரத குலத்தோன்றலே! பயமின்மை, மனத்தூய்மை, தொடர்ந்து ஆன்மீக அறிவைப்பெறுவதில்
நாட்டம், தானம், புலனடக்கம், தியாகம், புனித நூல்களைக்கற்றல், தவம், நேர்மை,
2.
अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम्।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम्।।16.2।।
அஹிம்சை,
உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, பிறரிடம் குறை காணாமை, எல்லா உயிர்களிடத்தும் கருணை,
பேராசையின்மை, மென்மை, அடக்கம், சபலமின்மை,
3.
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।16.3।।
வீரியம்,
மன்னிக்கும் குணம், எதையும் தாங்கும் உறுதி, தூய்மை, எவரிடமும் விரோதம் இல்லாமை, கர்வம்
இல்லாமை, ஆகிய இந்த நற்குணங்களே தெய்வீக இயல்புடையவர்களிடம் காணப்படுபவை.
4.
दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम्।।16.4।।
பார்த்தனே!
பாசாங்குத்தனம், ஆணவம், அகந்தை, கோபம், கடுமை, அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களிடத்துக்
காணப்படும் குணங்கள்.
5.
दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता।
मा शुचः सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव।।16.5।।
தெய்வீக
இயல்புகள் மோக்ஷத்துக்கு வழி வகுக்கின்றன; அசுரர்களுக்குரிய இயல்புகள் தொடர்ந்து பந்தங்களுக்கு
உட்படுத்துகின்றன. கவலைப்படாதே, அர்ஜுனா! நீ தெய்வீக இயல்புடன் தான் பிறந்திருக்கிறாய்.
6.
द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन् दैव आसुर एव च।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे श्रृणु।।16.6।।
இந்த
உலகில், தெய்வீக இயல்புள்ளவர்கள், அசுர இயல்புள்ளவர்கள் என்று இரு வகையான மனிதர்கள்
உள்ளனர். தெய்வீக இயல்பைப்பற்றி விவரமாகக் கூறி விட்டேன். அர்ஜுனா! இப்போது அசுர இயல்பைப்
பற்றிக் கூறுகிறேன், கேள்!
7.
प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते।।16.7।।
அசுர
இயல்பு உடையவர்கள் எவை சரியான செயல்கள், எவை தவறான செயல்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
ஆகவே, அவர்களிடம் தூய்மை, நன்னடத்தை, உண்மை ஆகிய நற்குணங்கள் காணப்படுவதில்லை.
8.
असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम्।
अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम्।।16.8।।
அவர்கள்
இந்த உலகில் உண்மையோ, ஒழுங்கோ, இறைவனோ இல்லவே இல்லை என்று கூறுகிறார்கள். உயிர்கள் எல்லாம், காம இச்சையை நிறைவேற்றிக் கொண்டதனால்
பிறந்தவையே அன்றி, அவற்றின் இருப்புக்கு வேறு காரணங்கள் இல்லை என்பது அவர்கள் கருத்து.
9.
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः।।16.9।।
சரியான
வழி நடத்தல் இல்லாத இந்த ஆத்மாக்கள், இத்தகைய கருத்துக்களைத் தீவிரமாகப் பிடித்துக்கொண்டு,
தங்களுடைய அல்ப புத்தியாலும், கொடூரமான செயல்களாலும், இந்த உலகின் எதிரிகளாகி, அதை
அழிக்க முற்படுகிறார்கள்.
10.काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः।
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः।।16.10।।
அசுர இயல்புடையவர்கள், திருப்திப்படுத்த முடியாத
ஆசைகளுடனும், பாசாங்கு நிரம்பிய நடத்தையுடனும், கர்வத்துடனும், ஆணவத்துடனும் தங்கள்
பொய்யான கொள்கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தவறான புரிதலுடன்
கூடிய இவர்கள், நிலையில்லாதவைகளால் கவரப்பட்டுத் தூய்மையற்ற தீர்மானத்துடன் செயல்படுகிறார்கள்.
11.चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः।
कामोपभोगपरमा एतावदिति निश्िचताः।।16.11।।
இவர்களுடைய கவலைகள் எல்லையற்றவை. மரணத்தின் போது தான் அவை முடிவுக்கு வரும். ஆனாலும்,
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதும், செல்வம் சேர்ப்பதுமே வாழ்க்கையின் உன்னதமான குறிக்கோள்
என்று சர்வ நிச்சயத்துடன் நம்புகிறார்கள்.
12.आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान्।।16.12।।
நூற்றுக்கணக்கான ஆசைகளால் கட்டுண்டு, காமமும்,
கோபமும் மீதூற, அநியாயமான வழிகளில் பொருள் சேர்க்கவும், தங்கள் ஆசைகளை எப்படியாவது
நிறைவேற்றிக் கொள்ளவும் இவர்கள் முயல்கிறார்கள்.
13.इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम्।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम्।।16.13।।
அறியாமையினால் மயக்கம் கொண்ட அசுர இயல்புடையவர்கள்,
“ நான் இன்று இவ்வளவு செல்வம் பெற்றுவிட்டேன்; இதைக்கொண்டு, என் இந்த ஆசையை நிறைவேற்றிக்
கொள்வேன். இந்தச் செல்வம் என்னுடையது. நாளை எனக்கு இன்னும் கிடைக்கும்.
14.असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी।।16.14।।
என்னுடைய அந்த எதிரியை அழித்து விட்டேன். மற்ற
எதிரிகளையும் அழித்து விடுவேன். நானே கடவுள். நான் அனைத்தையும் அனுபவிக்கிறேன். நான்
பலம் நிறைந்தவன்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
15.आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः।।16.15।।
நான் பணக்காரன்; எனக்கு பெரிய நிலையில் இருக்கும்
உறவினர்கள் இருக்கிறார்கள்.எனக்கு இணையானவர் யார்? நான் நிறைய வேள்விகள் செய்வேன்;
நிறைய தானம் கொடுப்பேன். நான் ஆனந்தமாக வாழ்வேன்” என்று தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்
.
16.अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः।
प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ।।16.16।।
இப்படிப்பட்ட கற்பனைகளால் வழி தவறிச் செல்லும்
அவர்கள், மோகவலையில் சிக்கிப், புலனின்பங்களுக்கு அடிமையாகி, இருண்ட நரகத்துள் வீழ்கிறார்கள்.
17.आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम्।।16.17।।
ஆணவமும், பிடிவாத குணமும் உடைய இவர்கள், தங்கள்
செல்வச்செருக்கால், படாடோபமாகச் செலவழித்து வேள்விகளைச் செய்கிறார்கள். ஆனால், சாஸ்திரங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள விதி முறைகளைப் பின்பற்றுவதில்லை.
18.अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः।
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः।।16.18।।
தங்கள் அகந்தை, பலம், ஆணவம், ஆசை, கோபம் ஆகிய
குணங்களால் குருடான இவர்கள் தங்கள் உடலுக்குள்ளும், பிறருடைய உடலுக்குள்ளும் இருக்கும்
எனக்கும் அவமரியாதை செய்கிறார்கள்.
19.तानहं द्विषतः क्रूरान्संसारेषु नराधमान्।
क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु।।16.19।।
இப்படிப்பட்ட கொடுமை நிறைந்த, வெறுக்கத்தக்க,
கீழ்த்தரமான மனிதர்களை, நான் தொடர்ந்து இதே போன்ற அசுர இயல்பு உடையவர்களின் கருவறைக்குள்
தள்ளி, இந்த உலகத்தில் மீண்டும் பிறக்க வைக்கிறேன்.
20.आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि।
मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम्।।16.20।।
அறிவற்ற
இவர்கள், திரும்பத் திரும்ப அசுர குணமுடையவர்களின் கருவறைகளில் இருந்து பிறக்கிறார்கள்.
அர்ஜுனா! என்னை அடைய முடியாத இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, மிகவும் கீழான கதியில் மூழ்குகிறார்கள்.
21.त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत्।।16.21।।
காமம், கோபம், பேராசை, இவை மூன்றும் தனது ஆத்மாவைத்
தானே அழித்துக் கொண்டு, நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகள் ஆகும். ஆகவே இவற்றை முற்றிலும்
விலக்க வேண்டும்.
22.एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः।
आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम्।।16.22।।
இந்த மூன்று இருண்ட வாயில்களில் இருந்து விலகியவர்கள்,
தங்கள் ஆத்மாவின் நலனுக்காக உழைத்து, அதன் மூலம்
பரமபதத்தை அடைகிறார்கள்.
23.यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम्।।16.23।।
ஆசையின் தூண்டுதலால், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள
விதி முறைகளை அலட்சியப்படுத்திச் செயல்படுபவர்கள், முழுமையையோ, மகிழ்ச்சியையோ, தங்கள்
உன்னத லட்சியத்தையோ, அடைவதில்லை.
24. तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि।।16.24।।
ஆகவே, எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது
என்பதைத் தீர்மானிக்கும் போது, சாஸ்திரங்களையே ஆதாரமாக எடுத்துக் கொள். சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ள விதிமுறைகளையும், அறிவுரைகளையும் புரிந்து கொண்டு, அவற்றின் படி இந்த
உலகத்தில் செயலாற்று.
சுபம்
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/1823209355575084240
No comments:
Post a Comment